``கட்சிக்குத் தலைவர் நானா, அவரா?” - ஹெச்.ராஜாவால் தகித்த தமிழிசை | bjp leader tamilisai complaint on hraja

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:34 (25/03/2019)

``கட்சிக்குத் தலைவர் நானா, அவரா?” - ஹெச்.ராஜாவால் தகித்த தமிழிசை

சர்ச்சையோடு ஒட்டிப் பிறந்தவராகிவிட்டார் பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெ.ராஜா. தேர்தல் பிரசாரத்துக்காக சிவகங்கை சென்றவர், காரைக்குடியில் வைத்து பா.ஜ.க வேட்பாளர் பட்டியலைத் தன்னிச்சையாக அறிவித்திருப்பது கட்சிக்குள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முரளிதரராவ், பியூஷ் கோயல் வரை இவ்விவகாரத்தைக் கொண்டு செல்ல பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஹெச்.ராஜா

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 17-ம் தேதி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கோயம்புத்தூர் என பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளும் வெளியிடப்பட்டன. இதுவரையில் அதிகாரபூர்வமாக வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க தலைமை வெளியிடவில்லை. 

இந்நிலையில், தேர்தல் பிரசாரத்துக்காக சிவகங்கை சென்றுள்ள பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா நேற்று காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ``கன்னியாகுமரிக்கு பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடிக்கு தமிழிசை, சிவகங்கைக்கு ஹெச்.ராஜா, ராமநாதபுரத்துக்கு நயினார் நாகேந்திரன், கோயம்புத்தூருக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடப்போகிறோம்’’ என்று அறிவித்தார்.  

தன்னைத் தானே வேட்பாளராக ஹெச்.ராஜா அறிவித்துக் கொண்டது பா.ஜ.க-வுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஊடகங்களில் செய்தி வெளியான அரைமணிநேரத்திலேயே, தான் வெளியிட்ட பட்டியல் வெறும் யூகம்தான் என மறுத்த ஹெச்.ராஜா, அதிகாரபூர்வ அறிவிப்பை கட்சித் தலைமைதான் வெளியிடும் என அந்தர் பல்டி அடித்தார். `டேமேஜ் கன்ட்ரோல்’ செய்வதற்குள், தேவையான பாதிப்பை ஹெச்.ராஜாவின் பேட்டி கட்சிக்குள் செய்துவிட்டது.

தமிழிசை

``கட்சிக்குத் தலைவர் நானா இல்லை அவரா தன்னிச்சையா அறிவிக்குறதுக்கா மேலிடப் பார்வையாளர், தேர்தல் பொறுப்பாளர், கட்சித் தலைவர்னு இத்தனை பேரு இருக்கோம்’’ எனத் தமிழிசை சௌந்தரராஜன் கொதித்ததாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டுக்கான பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலிடமும் மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவிடமும் இவ்விவகாரத்தை தமிழிசை எழுப்பவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏற்கெனவே கட்சிக்குள் தமிழிசைக்கும் ஹெச்.ராஜாவுக்கும் ஏழாம் பொருத்தம்தான். இந்நிலையில், வேட்பாளர் பட்டியலைத் தன்னிச்சையாக ஹெச்.ராஜா அறிவித்திருப்பது கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் செயலாகப் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க தலைவர்கள் சிலர், ``ஹெச்.ராஜாவுக்கு சீட் அளிப்பதை அ.தி.மு.க உட்பட பா.ஜ.க தலைவர்கள் பலரும் விரும்பவில்லை. மாநிலங்களவையில் உங்களுக்கு சீட் ஒதுக்குகிறோம் எனப் பா.ஜ.க தலைமை வலியுறுத்தியதை ஹெச்.ராஜா ஏற்கவில்லை. எங்கே தனக்கு கடைசி நேரத்தில் சீட் மறுக்கப்படுமோ என்கிற அச்சத்தில், தன்னிச்சையாகத் தன்னை வேட்பாளராக அறிவித்து, கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுக்க முயன்றாரா என்று எங்கள் தலைமை கருதுகிறது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு வாய்ப்பில்லை, எச்சரித்து அனுப்பலாம்’’ என்றனர்.

இதை, இத்தொடு தமிழிசை விடப்போகிறாரா அல்லது தனது தலைமையை நிலைநாட்டப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.