“ஓ.. அந்தளவுக்கு போய்ட்டாரா” - தினகரன் சீற்றத்தால் நீக்கப்பட்ட கலைராஜன் | ttv dinakaran expels district secretary kalairajan from ammk

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:37 (25/03/2019)

“ஓ.. அந்தளவுக்கு போய்ட்டாரா” - தினகரன் சீற்றத்தால் நீக்கப்பட்ட கலைராஜன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி.கலைராஜன் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். தினகரனுக்கும் கலைராஜனுக்கும் இடையே இருந்து வந்த மனக்கசப்பு தற்போது வெடித்து நீக்கம் வரை பாய்ந்திருப்பதாக அ.ம.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

டிடிவி தினகரன்

ஜெயலலிதாவின் 2006, 2011 ஆட்சிக்காலத்தில் தி.நகர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்தவர் வி.பி.கலைராஜன். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்தவரான இவர், சசிகலாவின் தூரத்து உறவினராவார். 2015 சென்னை பெருவெள்ளத்தின்போது, அரசுக்கு ஏற்பட்ட அவப்பெயரை குறைக்கும் விதமாக, சென்னையைச் சேர்ந்த 13 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் போட்டியிட ஜெயலலிதா சீட் வழங்கவில்லை. கலைராஜனின் தி.நகர் சீட் சத்யநாராயணனுக்கு வழங்கப்பட்டது. இதற்கு முன்னதாக அவரிடமிருந்து தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டது. 2016 தேர்தல் முடிந்தவுடன், மாவட்டச் செயலாளர் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டது. 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க இரண்டாக உடைந்தபோது, சசிகலா அணியில் நின்றவர் வி.பி.கலைராஜன். அ.ம.மு.க-விலும் தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க மூத்த நிர்வாகிகள், ``தினகரன் பற்றியும் அவரின் மனைவி அனுராதா பற்றியும் பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களைக் கலைராஜன் செய்து வந்தார். மற்ற மாவட்டச் செயலாளர்களுடனும் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்தார். கட்சித் தலைமை எச்சரித்தும் தனது போக்கை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. இதனாலேயே தினகரனுக்கும் அவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டது.

கட்சி சார்பில் நடத்தப்படும் போராட்டங்கள், கூட்டங்களிலும் ஆர்வம் செலுத்துவதில்லை. கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வுக்கும் அவர் வரவில்லை. இந்நிலையில், அவரை தி.மு.க மாவட்டச் செயலாளர்களான சேகர்பாபு, ஜெ.அன்பழகன் இருவரும் சந்தித்து தி.மு.க-வுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். திருச்சியில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் தி.மு.க-வில் இணையவிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. 

இச்செய்தியைத் தினகரனுக்குத் தெரிவித்தோம். `ஓ... அந்தளவுக்குப் போயிட்டாரா? இனி கட்சியில் வைத்திருப்பது நல்லா இருக்காது’ என்று சீறியவர், கலைராஜனை நீக்கி உத்தரவிட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அமைப்புச் செயலாளரும் மண்டலப் பொறுப்பாளருமான சுகுமார் பாபு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்’’ என்றனர். 

வி.பி.கலைராஜன்

வி.பி.கலைராஜன் தரப்பில் பேசினோம். ``வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் வெற்றிவேலுக்கும் கலைராஜனுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளரான பா.சீனிவாசனை நீக்கம் செய்ய வைத்துவிட்டு, தன் ஆதரவாளரான லக்கி முருகனை அப்பொறுப்புக்குக் கொண்டு வந்தார். இப்போது கலைராஜனையும் உள்ளடி வேலை செய்து நீக்கம் செய்ய வைத்துள்ளார்’’ என்றவர்களிடம், ``கலைராஜன் தி.மு.க-வுக்குத் தாவப்போவதாகச் செய்திகள் வருகிறதே?’’ என்றோம். 

``விசுவாசத்துக்கு மதிப்பு இல்லாத இடத்தில் இனியும் இருப்பதால் பயனில்லை. எங்கு மரியாதை கிடைக்கிறதோ, அங்கு செல்வதுதான் புத்திசாலித்தனம்’’ என்றதோடு முடித்துக்கொண்டனர். உள்ளடி வேலை செய்ததாகக் கலைராஜன் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டை வெற்றிவேல் தரப்பு முற்றிலுமாக மறுத்தது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, சசிகலா, தினகரன் குறித்து அவதூறாகக் கலைராஜன் பொதுவெளியில் பேசியதாலும், தி.மு.க-வுக்கு அணிதாவும் முடிவெடுத்திருந்ததாலுமே அவர் நீக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். 

சமீபத்தில்தான் முன்னாள் அமைச்சர் தாமோதரன், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்த குள.சண்முகநாதன் ஆகியோர் அ.தி.மு.க-வுக்குத் தாவினர். தற்போது வி.பி.கலைராஜன் நீக்கப்பட்டுள்ளார். ``யார் வந்தாலும் சென்றாலும் இயக்கம் நிற்கும்!’’ என்று டி.டி.வி.தினகரன் பலமுறை கூறியுள்ளார். போகிற போக்கைப் பார்த்தால், இயக்கத்தை நடத்த நிர்வாகிகள் இல்லாமல் போய்விடுவார்களோ என்கிற கவலை அ.ம.மு.க தொண்டர்கள் மத்தியில் எழுந்திருப்பதை மறுப்பதிற்கில்லை.