திருச்சியில் களைகட்டிய தெப்பத்திருவிழா! | Thayumanavar temple Theppa Thiruvizha held in Trichy

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (21/03/2019)

கடைசி தொடர்பு:11:00 (21/03/2019)

திருச்சியில் களைகட்டிய தெப்பத்திருவிழா!

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் வருடாவருடம் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமான சுவாமிக்கு நடைபெறும் மிகவும் பிரசித்திபெற்ற விழாக்களில் ஒன்று தெப்பத்திருவிழா.

தெப்பத் திருவிழா

அந்தவகையில் இந்த வருட தெப்பத் திருவிழா நேற்று இரவு நடைப்பெற்றது. கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தெப்பத் திருவிழா, தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் 7 மணியளவில் பல்வேறு வகையான வாகனங்களில் தாயுமான சுவாமிகள் - அம்பாள் ஆகியோர் திருச்சி மலைக்கோட்டை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அதையடுத்து திருவிழாவின் முக்கியமான நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். அடுத்து அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. மேலும், இந்த விழாவையொட்டி தெப்பக்குளத்தின் நடுப்பகுதியில் உள்ள நீராழி மண்டபம் உட்படத் தெப்பக்குளம் சுற்றிலும் மின்விளக்குகளால் ஜொலித்தன. மேலும், தெப்ப உற்சவத்தைப் பக்தர்கள் பார்ப்பதற்கு வசதியாக, தெப்பக் குளத்தை சுற்றியும் போடப்பட்டு இருந்த அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

தெப்பத்திருவிழாவை முன்னிட்டு நேற்று மதியம் தாயுமான சுவாமி அம்பாள் உள்ளிட்டோருக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் தாயுமான சுவாமி மற்றும் அம்பாள் புறப்பாடு மலைக்கோட்டையில் புறப்பட்டு, திருச்சி மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள உள்வீதி, சின்னக்கடை வீதி, என்.எஸ்.பி சாலை வழியாகத் திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ள தெப்பக்குளத்தைச் சுற்றி வந்து தெப்பக்குளத்தில் தயார் நிலையில் இருந்த தெப்பத்தில் இரவு 8 மணியளவில் எழுந்தருளினார்.

தெப்பக்குளம்தெப்பக்குளத்தில் ஐந்து முறை தெப்பம் சுற்றி வந்தது. பின்னர், தெப்பக்குளத்தில் நடுப்பகுதியில் உள்ள நீராழி மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளுடன் தாயுமானசுவாமியும் அம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த நிகழ்ச்சியைக் காணுவதற்கு திருச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அதையடுத்து, இரவு 10 மணிக்கு மேலும் தாயுமான சுவாமிகள் மற்றும் அம்பாள் ஆகியோர் மீண்டும் தெப்பத்தில் இருந்து வெளியே வந்து, நந்தி கோயில் தெரு, ஆண்டார் வீதி, சரக்கு பாதை வழியாக இரவு 12 மணியளவில் மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலைச் சென்றடைந்தனர்.


கடந்த 12-ம் தேதியிலிருந்து தெப்பத் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டைப் பகுதியில் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியுடன் திருவிழா நடைபெற உள்ளது. திருச்சி மலைக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதி, தெப்பத்திருவிழாவை முன்னிட்டு களைகட்டுகிறது.