‘தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தாமல் இருந்தால் சரி” - தினகரன் சொல்லும் ஆரூடம்! | Election Commission can stop polling says dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:38 (25/03/2019)

‘தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தாமல் இருந்தால் சரி” - தினகரன் சொல்லும் ஆரூடம்!

ஏதாவது  காரணத்தைச் சொல்லி, தேர்தல் ஆணையம் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நிறுத்தி வைத்தாலும் வைக்கலாம். நான் ஒருபோதும் தேர்தல் ஆணையத்தை நம்புவதில்லை என்கிறார் டி.டி.வி.தினகரன்.

டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் போட்டியிடுகிறார். இந்நிலையில், நேற்று மாலை திருச்சி வந்த அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான டி.டி.வி.தினகரன், திருச்சி  மாவட்டச் செயலாளர்கள் சீனிவாசன், மனோகரன், ராஜசேகர் மற்றும் சாருபாலா ஆகியோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தை அடுத்துள்ள வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டான பகுதியில் உள்ள சாருபாலா தொண்டைமான் குடும்பத்துக்குட்பட்ட அரண்மனைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.  அப்போது தினகரனை வரவேற்க வைக்கப்பட்ட பட்டாசு வெடித்ததில் அந்தப் பகுதியில் இருந்த காய்ந்த சருகுகளில் தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது. அதையடுத்து தீ அணைக்கப்பட்டது.

தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “இந்த ஆட்சியாளர்களின் அராஜகத்தையும் அடக்குமுறைகளையும் கண்டு கொதிப்படைந்த மக்கள் ஆர்.கே.நகரில் சுயேச்சையாகப் போட்டியிட்ட என்னை மாபெரும் வெற்றி அடைய வைத்தார்கள். அதைத்தொடர்ந்து திருவாரூர் தேர்தல் நடக்க இருந்த நிலையில், எங்கே நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் எனப் பயந்து அந்தத் தேர்தலை ஒத்தி வைத்தார்கள். இப்போது நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது, அதனால்தான் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துகிறார்கள். இப்போது மக்கள் யார் பக்கம் என்பதை மே 23-ம் தேதி எல்லோருக்கும் தெரியப்படுத்துவார்கள்.

டிடிவி தினகரன்


கடந்த ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் யார் பக்கம் என்பதைத் தெரியப்படுத்தினார்கள். அதேபோலவே இப்போது தமிழக மக்கள் தெளிவாக எல்லோருக்கும் விரைவில் தெரியப்படுத்துவார்கள்.18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவித்துள்ளார்கள். தமிழகத்தில் ஆளும் எடப்பாடி சர்க்காரும் மத்தியில் மோடி ஆட்சியும் நடக்கின்றன. இவர்களைத் தாண்டி மே 23-ம் தேதி தமிழகத்தில் பெரும் புயல் வரக்கூடும் வெள்ளம் வரக்கூடும் என்று ஏதாவது காரணத்தைச் சொல்லித் தேர்தல் ஆணையம் 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை நிறுத்தி வைத்தாலும் வைக்கலாம். நான் ஒருபோதும் தேர்தல் ஆணையத்தை நம்புவதில்லை. நீதிமன்றத்தையே நம்புகிறேன்.

தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை தொடர்ச்சியாகப் பாரபட்சமாகச் செயல்படுகிறது. குறிப்பாக, தேர்தல் சின்னம் வழங்குவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுகிறது. கடந்த வருடம் ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இரட்டை இலைச் சின்னம் வழங்கிய அடுத்த நாளே ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தது. எங்களை சுயேச்சைச் சின்னத்தில் போட்டியிட வைத்தார்கள். அதேபோல்தான் தொடர்ந்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. நாங்கள் எந்தச் சின்னத்தில் நின்றாலும் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு புவனகிரியில் நடந்த இடைத்தேர்தலில் மக்கள் வாழைப்பழத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்தார்கள். அதேபோல் ஆர்.கே.நகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் வாக்களித்தார்கள். எங்களுக்கு ஒரே சின்னம் கிடைக்கவில்லை என்றாலும்,தொகுதிக்குத் தொகுதி தனிச் சின்னத்தில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், மக்கள் எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். மக்கள் மிக விழிப்புணர்வுடன் உள்ளார்கள்.

தற்போது வெளியிடும் கருத்துக் கணிப்புகளில் எங்களுக்குச் கணிசமான வாக்குகள் கிடைக்கும் எனப் பெருந்தன்மையோடு கூறுகிறார்கள். இப்படிதான் கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது எங்களுக்கு 25 சதவிகித வாக்குகள் கிடைக்கும் எனக் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டது. ஆனால், அந்தத் தேர்தலில் மக்கள் 50 சதவிகித வாக்குகளை எங்களுக்கு அளித்து வெற்றியைத் தந்தார்கள். அதே போன்ற ஒரு வெற்றியைத் தமிழக மக்கள் மே மாதம் 23-ம்தேதி அவர்களின் விருப்பத்தை வெளிப்படுத்தி மாபெரும் வெற்றியை எங்களுக்குத் தருவார்கள்.

 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அடுத்தகட்டமான வேட்பாளர் பட்டியல் வரும் 22-ம் தேதி அறிவிக்கப்படும். எடப்பாடி பழனிசாமியிடமும் ஓ.பி.எஸ் இடமும் இருப்பது ஆட்சி அதிகாரம் மட்டும்தான். ஆனால், அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் எங்களிடம் வந்து சேர்ந்துவிட்டார்கள். அவர்கள் எல்லோரும் எங்களோடுதான் இருக்கிறார்கள். தேனி நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து வரும் 24-ம் தேதி தெரிவிப்போம் என்றவர், எதையாவது சொல்லி மக்களை மயக்கி வாக்குகளைப் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் ஏதாவது மாயாஜாலங்களை நிகழ்த்த வேண்டும் என எண்ணுவார்கள். ஆனால், மக்கள் எங்கள் பக்கம் இருப்பதால் நாங்கள் தேர்தல் யுக்திகளைப் பயன்படுத்த வேண்டியது இல்லை. மேலும் வரும் 23-ம் தேதி தேர்தல் சின்னம் வழங்குவது குறித்த விசாரணை நடத்த இருக்கிறது. அன்று விசாரணை முடித்து எடுக்கப்படும் முடிவைப் பொறுத்து, அடுத்த நாள் 26-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய இருக்கிறோம். எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று, இரண்டாவது இடம் அ.தி.மு.க-வுக்கா தி.மு.க-வுக்கா என்பதுதான் தற்போதையப் போட்டி. அதை மக்கள் முடிவு செய்வார்கள்.”