கட்சிக்குள் அதிருப்தி.! – பெரியகுளம் வேட்பாளரை மாற்றுகிறதா அ.தி.மு.க? | ADMK Change their Candidate in Periyakulam

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:38 (25/03/2019)

கட்சிக்குள் அதிருப்தி.! – பெரியகுளம் வேட்பாளரை மாற்றுகிறதா அ.தி.மு.க?

கட்சி நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த பெரியகுளம் (தனி) அ.தி.மு.க வேட்பாளரை மாற்ற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், அ.தி.மு.க சார்பில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் லோகிராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். உடன், பெரியகுளம்(தனி) தொகுதியில் முருகன் என்பவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. MA., B.Ed., MSW படித்திருக்கும் முருகன், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சமூக நல அலுவலராகப் பணியாற்றிவருகிறார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலமாக ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசி சீட் பெறப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், முருகனுக்கு சீட் கொடுக்கப்பட்டது தேனி மாவட்ட கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒருவருக்கு சீட் கொடுக்காமல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக சென்னையில் இருப்பவருக்கு சீட் கொடுக்கலாமா என்று விவாதத்தைக் கிளப்பியது.  

ஓ.பன்னீர்செல்வம்

இந்நிலையில், முருகன் பெரியகுளத்தில் போட்டியிட மாட்டார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் அந்த வாய்ப்பு வழங்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு ஏற்றார்போல, நேற்று சென்னையிலிருந்து தேனி வந்த ரவீந்திரநாத்குமார், பட்டாளம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது ஆண்டிபட்டி வேட்பாளர் லோகிராஜன் வந்திருந்தார். பெரியகுளம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் வரவில்லை.