``ஜோதிமணியை வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டோம்!’’ - அ.தி.மு.க-வுக்குத் தாவிய கரூர் காங்கிரஸ் நிர்வாகிகள் | "We will not accept Jyothimani as candidate!" - Karur Congress members

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:40 (25/03/2019)

``ஜோதிமணியை வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டோம்!’’ - அ.தி.மு.க-வுக்குத் தாவிய கரூர் காங்கிரஸ் நிர்வாகிகள்

அதிமுகவுக்கு தாவிய காங்கிரஸ் கட்சியினர்

 `பிரிக்க முடியாதது எது?’ என்று கேட்டால், `காங்கிரஸும் கோஷ்டிப்பூசலும்’ என்று தயங்காமல் சொல்லலாம்போலிருக்கிறது. `கரூர் தொகுதி வேட்பாளராக ஜோதிமணியை அறிவிக்கக் கூடாது’ என்று வலியுறுத்தி வந்த 30-க்கும் மேற்பட்ட காங்கிரஸார், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க-வில் ஐக்கியமாகியிருக்கிறார்கள்.

ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தமிழகத்தில் உள்ள பிரதானக் கட்சிகள், மற்றக் கட்சிகளோடு கூட்டணி அமைத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டார்கள். பல கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட, கங்கிரஸ் கட்சி மட்டும் இன்னமும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. அதற்குக் காரணம், வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் ஏற்பட்ட இழுபறிதான் காரணம் என்கிறார்கள்.

இந்நிலையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வேட்பாளர் யாரென்று அறிவிக்கப்படாத நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து, `கரூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு வாக்களிப்பீர்’ என்று சமூக வலைதளங்களில் செய்திகள் உலாவரத் தொடங்கின. தி.மு.க-வின் அதிகரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும், ஜோதிமணியையே வேட்பாளராகச் சித்திரித்து பதிவுகள் போடப்பட்டன. இதனால், ஜோதிமணியின் எதிர்க்கோஷ்டிகள் கச்சைக்கட்டத் தொடங்கின. 

ஜோதிமணி

காங்கிரஸ் கட்சி கரூர் மாவட்ட முன்னாள் தலைவர் பேங்க் சுப்ரமணி தரப்பு, `ஜோதிமணியைத் தவிர்த்து வேற யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக நியமியுங்கள்’னு என்று பரபரப்பைக் கிளப்பினார்கள். முன்னாள் எம்.எல்.ஏ ராமநாதன் தரப்பு தனது ஆதரவாளர்களைக் கூட்டி கூட்டம் போட்டு, `ஜோதிமணியை வேட்பாளராக்கக் கூடாது’ என்று தீர்மானம் நிறைவேற்றியது. காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணிச் செயலாளர் ஜெயபிரகாஷ் என்பவர், `ஜோதிமணியை வேட்பாளராக அறிவித்தால், தோல்வி நிச்சயம்’ என்று அதிரிபுதிரி கிளப்பினார்.

ஜெயப்பிரகாஷ்

இந்நிலையில், ஜெயப்பிரகாஷ் தலைமையில் கரூர் மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கம், க.பரமத்தி வட்டாரச் செயலாளர் பாலு, துணைத் தலைவர் சுப்ரமணி, பொதுச் செயலாளர் தங்கதுரை, இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நவீன், மகிளா காங்கிரஸ் செயலாளர் நிர்மலா, கிராம கமிட்டித் தலைவர்கள் ரவி, ஜோதி, ஜெகநாதன் மற்றும் வட்டார நிர்வாகிகள் 30 பேர்களும் காங்கிரஸிலிருந்து விலகி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்துள்ளனர்.

இதுபற்றி, நம்மிடம் பேசிய ஜெயபிரகாஷ், ``கரூர் தொகுதியில் ஜோதிமணிதான் வேட்பாளர்னு சொல்றாங்க. அதனால்தான், நாங்க அ.தி.மு.க-வுக்குச் சென்றுள்ளோம். 2014-ம் நாடாளுமன்றத் தேர்தலில் ஜோதிமணி தனது சொந்தக் கிராமமான பெரியதிருமங்கலத்தில் வெறும் 7 ஓட்டுகளை மட்டுமே வாங்கினர். இப்படி சொந்த ஊரிலேயே செல்வாக்கு இல்லாத ஒருவரை வேட்பாளராக அறிவித்தால், அவரால் எப்படி வெற்றி பெற முடியும்? கடந்த இரண்டு வருடங்களாக ஜோதிமணி ஆதரவாளரான சின்னசாமி மாவட்டத் தலைவராக இருக்கிறார். கட்சியைத் தேய்பிறையாக மாற்றி வைத்திருக்கிறார்கள். அதனால்தான், நாங்க காங்கிரஸைவிட்டு, அ.தி.மு.க-வுக்கு சென்றுள்ளோம். எங்களைப் ல் மேலும் பல நிர்வாகிகள் விரக்தியில் உள்ளனர்’’ என்றார்.