``பதவியெல்லாம் பிரச்னை இல்ல; அந்த மூணு பேர்தான்’’ - கலைராஜன் விலகலுக்கு இதுதான் காரணம் | Reason Beyond Kalairajan Distortion

வெளியிடப்பட்ட நேரம்: 12:57 (21/03/2019)

கடைசி தொடர்பு:13:22 (21/03/2019)

``பதவியெல்லாம் பிரச்னை இல்ல; அந்த மூணு பேர்தான்’’ - கலைராஜன் விலகலுக்கு இதுதான் காரணம்

டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான வி.பி.கலைராஜன், திருச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார். டி.டி.வி.தினகரனிடமிருந்து கலைராஜன் விலகியதற்கு மூன்று பேர்தான் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

ஸ்டாலினுடன் கலைராஜன்

 

 டி.டி.வி.தினகரனையும் வி.பி.கலைராஜனையும் பிரித்துப் பார்க்க முடியாது. அந்தளவுக்கு டி.டி.வி.தினகரனின் நிழலாக இருந்தவர் வி.பி.கலைராஜன். இவர், சசிகலா குடும்பத்தினருக்கு உறவினர் என்பதைத்தாண்டி அந்தக் குடும்பத்தின் தீவிர விசுவாசியாக இருந்தார். சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்குப் பிறகு, மாவட்டச் செயலாளர் பதவியை வி.பி.கலைராஜனிடமிருந்து ஜெயலலிதா பறித்தார். அதன் பிறகு, நடந்த தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் டி.ஜி.பி நட்ராஜ் வெற்றி பெற உறுதுணையாக இருந்த வி.பி.கலைராஜனுக்கு ஜெயலலிதா மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவியை வழங்கினார். 

ஜெயலலிதா உயிரோடு இருந்த காலகட்டத்தில் அடுத்தகட்ட தலைவர்களுடன் முட்டல் மோதல் வி.பி.கலைராஜனுக்கு இருந்துவந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டது. அப்போது சசிகலா அணியில் வி.பி.கலைராஜன் இருந்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை டி.டி.வி.தினகரன் உருவாக்கியபோது அவருக்கு உறுதுணையாக இருந்தார் வி.பி.கலைராஜன். ஆனால், சில காரணங்களுக்காக மாவட்ட அளவிலேயே வி.பி.கலைராஜனுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால், டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கமான மூன்று ஆதரவாளர்களுக்கு மாநில அளவில் பதவிகள் கொடுக்கப்பட்டன. இதுதான் வி.பி.கலைராஜனுக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடுக்கு விதையானது. 

ஸ்டாலினுடன் கலைராஜன் 

இந்தநிலையில்தான் வி.பி.கலைராஜனின் சிஷ்யர்களில் ஒருவரான செந்தில்பாலாஜி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து தி.மு.க-வில் இணைந்தார். அதுதொடர்பாக, கலைராஜனிடம் தினகரன் ஆலோசித்துள்ளார். அப்போதுதான் கட்சியின் உள்விவகாரங்களைக் கூறிய கலைராஜன், கட்சியில் உள்ள மூன்றுபேர் குறித்த விவரங்களையும் கூறியுள்ளார். ஆனால், அதைத் தினகரன் பெரிதுபடுத்தவில்லை. அந்த மூன்று பேருக்கும் வழக்கம்போல அவர் முக்கியத்துவம் கொடுத்துவந்தார். இந்த மனவருத்தத்தில்தான் கலைராஜன், செந்தில்பாலாஜி மூலம் தி.மு.க-வில் இணைந்துள்ளார் என்கின்றனர் கலைராஜனுக்கு நெருக்கமானவர்கள். இதனால்தான் திருச்சியில் இணைப்பு விழா நடந்துள்ளது. 

வி.பி.கலைராஜனிடம் பேசினோம். ``டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்த நான், மதவாத கட்சிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தி.மு.க-வில் தற்போது இணைந்துள்ளேன். தினகரன் மீதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மீதும் எனக்கு எந்தவித வருத்தமுமில்லை என்றவரிடம், ``அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற தகவல் வருகிறதே என்று கேட்டதற்கு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை’’ என்றார். 

செந்தில்பாலாஜி மூலம்தான் தி.மு.க-வில் நீங்கள் சேர்ந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளதே என்று கேட்டதற்கு, ``ஸ்டாலின்கூட எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்தான்’’ என்று முடித்துக்கொண்டார். 

ஸ்டாலினுடன் கலைராஜன் 

இதுகுறித்து வி.பி.கலைராஜனுக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, ``அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் மாவட்ட அளவிலான பதவி மட்டுமே வி.பி.கலைராஜனுக்குக் கொடுக்கப்பட்டது. மாநில அளவில் அவருக்கு முக்கியத்தும் கொடுக்கப்படவில்லை. அதற்கு கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் இருவரும், முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரும்தான் காரணம். கலைராஜனைப் பொறுத்தவரை தவறுகளை உடனுக்குடன் தட்டிக்கேட்பார். ஜால்ரா போடமாட்டார். ஆனால், அந்த மூன்று பேரும் கலைராஜனுக்கு எதிராக உள்ளடி வேலைகளைப் பார்த்துவந்தனர். இதனால்தான் அவர் கட்சியிலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்துள்ளார். பெருந்தன்மையுடன் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக எந்தக் கருத்துகளையும் அவர் சொல்லவில்லை’’ என்றார். 

 இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, ``வி.பி.கலைராஜனுக்கு நெருக்கமானவர்கள் தி.மு.க-வில் இணைந்த பிறகு அவரின் நடவடிக்கைகள் கட்சிக்கு எதிராகவே இருந்தது. இதற்கிடையில் அவர் தி.மு.க-வுக்குச் செல்லும் தகவல் தினகரனுக்கு முன்கூட்டியே தெரியவந்தது. இதனால்தான் அவரைக் கட்சியிலிருந்து தினகரன் நீக்கிவிட்டார்’’ என்றார். 

இதற்கிடையில் வி.பி.கலைராஜனுக்கு வேண்டப்பட்ட அமைச்சர் ஒருவர் அ.தி.மு.க-வில் உள்ளார். அவருடன் அரசியலைத் தவிர்த்து நட்பு ரீதியாக வி.பி.கலைராஜன் தொடர்பில் இருந்துவந்தார். அவரைத்தான் தினகரன் தன்னுடைய ஸ்லிப்பர் செல் என்று சொல்லிவந்தார். ஆனால், அவர் மூலம் எந்தவித செயலும் நடக்கவில்லை. அதோடு வி.பி.கலைராஜனுக்கும் அ.தி.மு.க-வின் மூத்த அமைச்சர் ஒருவருக்கும் ஆரம்பத்திலிருந்தே பிடிக்காது. இருவரும் ஒரு அணியில் நிர்வாகியாக இருந்தனர். அப்போது தொடர்ந்த கோஷ்டி பூசல் இதுவரை நீடித்துவருகிறது. வி.பி.கலைராஜன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து அவரின் தீவிர ஆதரவாளர்களும் விரைவில் தி.மு.க-வில் இணைய உள்ளனர்.