ஏழை மக்கள் போட்டியிடவே முடியாதா? - ஒரு ரூபாயுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் | An independent candidate Abdul Wahid

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:52 (25/03/2019)

ஏழை மக்கள் போட்டியிடவே முடியாதா? - ஒரு ரூபாயுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர்

வேட்பாளர்

சேலம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று சுயேச்சை வேட்பாளர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தேர்தல் அலுவலரைச் சந்தித்து தன் வேட்புமனுவைக் கொடுத்தார். அந்த மனுவை வாங்கிக் கொண்ட தேர்தல் அலுவலர் டெபாசிட் தொகை 25,000 கேட்டதற்கு தன் மேல் பாக்கெட்டிலிருந்து ஒரு ரூபாய் எடுத்து வைத்தவர். இத்தொகையை வாங்கிக் கொண்டு என் வேட்புமனுவை அங்கீகரிக்க வேண்டுமென்றார். அந்த ஒரு ரூபாய் அவரிடமே திருப்பிக் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார்.  

வெளியே வந்த அந்த சுயேச்சை வேட்பாளரிடம் கேட்டதற்கு, ``என் பெயர் அப்துல் வாஹித். நான் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவன். சேலம் மாநிலக் கல்லூரியில் எம்.எஸ்.சி கம்யூட்டர் முடித்திருக்கிறேன். 2014 சேலம் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 ஓமலூர் சட்டமன்றத் தேர்தலும் போட்டியிட்டு மூன்றிலக்க எண்ணிக்கையில் ஓட்டுகள் வாங்கியிருக்கிறேன். கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்களில் ஒரு ரூபாய் செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்தேன். வேட்புமனு பரிசீலனையின் போது என் மனு தள்ளுபடி ஆனது.

ஆனால், இன்று ஒரு ரூபாய் செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்ய வந்தேன். ஆனால், என் மனு ஏற்றுக்கொள்ளவில்லை. இது தவறானது. இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு எதிரானது. ஜனநாயக நாடு என்கிறார்கள். இவ்வளவு டெபாசிட் தொகை வைத்தால் எப்படிச் சமூகச் சிந்தனையுடைய ஏழை மக்கள் தேர்தலில் போட்டியிட முடியும். குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு ரூபாய் வாங்காமல் தேர்வு செய்வது போல் மக்களவை தேர்தலிலும் டெபாசிட் தொகை வாங்கக் கூடாது.

 

 

என் வேட்புமனு நிராகரித்ததற்கு நான் வழக்கு போடலாம். ஆனால், இந்தியாவில் பிரிட்டீஸ்காரர்கள் உருவாக்கிய 5 நீதிமன்றத்தில் வழக்கு போட முடியும். அதில் வழக்கு தாக்கல் செய்வதற்கே 30,000 செலுத்த வேண்டியிருக்கிறது. நான் பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருப்பதால் வழக்கு போட முடியாது.

 

 

தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது. வேட்பாளர்கள் அனைவரிடமும் சமமாக 25,000 வாங்கும் தேர்தல் ஆணையம் தேசியக் கட்சிகளுக்கும், மாநில அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் வாக்காளர் பட்டியலை இலவசமாகத் தருகிறது. சுயேச்சை வேட்பாளர்களுக்கு வாக்காளர் பட்டியல் கொடுப்பதில்லை. சுயேச்சை வேட்பாளர்கள் கூடுதலாக 10,000 செலுத்தி வேட்பாளர் பட்டியல் வாங்க வேண்டும். இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதையெல்லாம் கேட்க வேண்டுமானால் டெல்லி தேர்தல் ஆணையத்திற்குச் செல்ல வேண்டியிருக்கிறது'' என்றார்.