``இதையெல்லாம் கட்டுனது அண்ணன்தான்!’’ - தனி ரூட்டில் பிரசாரம் செய்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் | minister m.r.vijayabaskar campaign in karur

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:54 (25/03/2019)

``இதையெல்லாம் கட்டுனது அண்ணன்தான்!’’ - தனி ரூட்டில் பிரசாரம் செய்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

           தம்பிதுரை - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் தம்பிதுரை எல்லோருக்கும் முன்பாக முதல் ஆளாக பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். அவர் பிரசாரம் செய்யும்போது, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனிரூட்டில், அதோ அந்த நாடகமேடையைக் கட்டியது யார் தெரியுமில்லே... இதோ இந்த பைப்பைப் போட்டது யார் தெரியுமில்லே... எல்லாம் அண்ணன்தான்’’ என்று வாக்குகள் கேட்டது, அதிரிபுதிரியைக் கிளப்பியிருக்கிறது.

கோயிலில் தம்பிதுரை


ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்காக, தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளெல்லாம் மற்றக் கட்சிகளோடு கூட்டணி அமைத்து, தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டன. பல கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க, சில கட்சிகள் இன்னமும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் இழுத்தடித்து வருகின்றன. அ.தி.மு.க சார்பில் கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக மறுபடியும் தம்பிதுரையே களமிறக்கப்பட்டிருக்கிறார். கரூர் நாடாளுமன்றத் தொகுதியானது கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, வேடச்சந்தூர் மற்றும் விராலிமலை உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. கரூர் நாடாளுமன்றத் தொகுதி அ.ம.மு.க வேட்பாளராக அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளரான தங்கவேல் அறிவிக்கப்பட்டிருக்கிறார். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கரூர் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வேட்பாளர் தேர்வில் அவர்களுக்குள் இன்னமும் இழுபறி நீடிப்பதால், வேட்பாளரை அறிவிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

கரூரில் தேர்தல் பரப்புரை


இந்நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை எல்லோருக்கும் முன்பாக நேற்று பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். தனது சென்டிமென்ட் கோயில்களான கோடங்கிப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாளம்மன், முத்தாளம்மன் கோயில்களில் சாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு, பிரசாரத்தைத் தொடங்கினார். கோடங்கிப்பட்டி, கோடங்கிப்பட்டி ஆதிதிராவிடர் காலனி, சின்ன கோடங்கிப்பட்டி, ஒத்தையூர், பால்வார்ப்பட்டி ஆகிய கிராமங்களில் நேற்று பிரசாரத்தைத் தொடங்கினார். எல்லா நிகழ்ச்சிகளிலும் தம்பிதுரையோடு சென்ற போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தம்பிதுரை மைக்கில் பேசினால், அமைச்சர் தனிரூட்டில் மக்கள் கூட்டத்தில் புகுந்து தனிப்பிரசாரம் செய்தார். அவ்வப்போது மைக்கிலும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தம்பிதுரைக்காக வாக்குகள் சேகரித்தார். ஒத்தையூர் பகுதியில் நடைபெற்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, தம்பிதுரை மைக்கில் ஓட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார். மற்றொருபுறம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மக்கள் கூட்டத்தை நெருங்கி, அவர்களிடம் அருகில் இருந்த நாடக மேடையைக் காண்பித்தார். 

எம் ஆர் விஜயபாஸ்கர்


``இந்த நாடக மேடையைக் கட்டியது யார் தெரியுமில்லே... அதோ அந்த பைப்பை போட்டது யார் தெரியுமில்லே... எல்லாம் அண்ணன்தான். அதனால், அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப்போடுங்க’’ என்றார். விடாமல் மக்களிடம், ``உங்களுக்கு என்ன பிரச்னை?’’ என்று கேட்டார். ``தண்ணிதான் பிரச்னை’’ என்று சொல்ல, ``ஊழியர்களை வச்சு சரிபண்ணிடுவோம்’’ என்றபடி, மக்களிடம் விடாமல் பேசிக்கொண்டிருந்தார். அதற்குள், தம்பிதுரை பேச்சை முடித்துக்கொண்டு காருக்குள் ஏறிவிட்டார். ஆனால், அமைச்சரைக் காணாமல் தேடிய அவர், மக்களிடம் பேசிக்கொண்டிருந்த அவரைப் பார்த்ததும் மறுபடியும் இறங்கிப்போனார். ``என்ன..?’’ என்று கேட்க, ``ஒண்ணுமில்லை’’ என்றபடி, தம்பிதுரையோடு போய் காரில் ஏறினார் அமைச்சர்.

தம்பிதுரை - எம் ஆர் விஜயபாஸ்கர்

பிறகு விசாரித்தால், ``அமைச்சரின் இந்த தனிப்பிரசாரத்துக்குக் காரணம், அந்த ஒத்தையூர் இவர் எம்.எல்.ஏ-வாக இருக்கும் கரூர் சட்டமன்றத் தொகுதி லிமிட்டுக்குள் வருது. அதனால், மக்களின் மனதில் அ.தி.மு.க-வை பதிய வைக்கவே இப்படி தனிரூட்டில் பிரசாரம் செய்கிறார். தனது செல்வாக்கு, தொகுதியைவிட்டுப் போய்விடக் கூடாது என்ற பயத்தில் அப்படிப் பிரசாரம் செய்கிறார். இது தேர்தல் விதிமுறைகளுக்குள் வருமா என்பதை அதிகாரிகள்தான் கண்காணிக்கணும்’’ என்றார்கள்.