``உங்களுக்கு வேண்டியது தேடி வரும்" - ஆதரவளித்த கட்சிகளுக்கு அ.தி.மு.க. மெசேஜ்! | ADMK sends Silent message to Supporting parties

வெளியிடப்பட்ட நேரம்: 14:28 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:54 (25/03/2019)

``உங்களுக்கு வேண்டியது தேடி வரும்" - ஆதரவளித்த கட்சிகளுக்கு அ.தி.மு.க. மெசேஜ்!

அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. ஏற்கெனவே கூட்டணியில் பா.ஜ.க இருப்பதால் என்ன சொல்லி நாங்கள் ஓட்டுக்கேட்க முடியும் என்று முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் கேள்வி எழுப்பியுள்ளார். 

அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகம்

 மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க.,தே.மு.தி.க. புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த யாருக்கும் சீட் ஒதுக்கப்படவில்லை. வேலூர், ராமநாதபுரத்தில் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.கவைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்கள் காத்திருந்தனர். ஆனால், வேலூர், ராமநாதபுரம் தொகுதிகள் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன. மேலும் அ.தி.மு.க. வேட்பாளர்களில்கூட முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த யாருமில்லை. இது, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

 இதுகுறித்து அ.தி.மு.கவுக்கு நீண்ட காலமாக ஆதரவளித்து வரும் முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் கூறுகையில், ``தி.மு.க.விலிருந்து பிரிந்து அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கிய சமயத்தில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த பலர் அவருக்கு உறுதுணையாக இருந்து அ.தி.மு.க-வின் வளர்ச்சிக்காக உழைத்தனர். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவும் முஸ்லிம் சமுதாயத்தின் மீது அன்பாகவும் ஆதரவாகவும் இருந்தார். 

அ.தி.மு.க. கூட்டணியில் பி.ஜே.பி. இடம்பிடித்துள்ள சூழ்நிலையில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த யாருக்கும் தேர்தலில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அ.தி.மு.க.வில் மட்டுமே லட்சகணக்கான முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால், இந்தத் தேர்தலில் முஸ்லிம் மக்களிடம் அ.தி.மு.க. கூட்டணியிலிருக்கும் என்னைப் போன்ற முஸ்லிம் அமைப்புகள் எப்படி ஓட்டுக் கேட்பது என்று தெரியவில்லை. அதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைச் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளோம். 

அதிமுகவுக்கு ஆதரவளிக்கு இடிமுரசு இஸ்மாயில்

 அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகளைச் சந்தித்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். அவர்களிடமும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற கோரிக்கையை முன்வைத்தேன். விரைவில் முதல்வர், துணை முதல்வரைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சூழ்நிலையில் ஏற்கெனவே பி.ஜே.பியுடன் அ.தி.மு.க கூட்டணி அமைத்துள்ளதால் முஸ்லிம் மக்களின் எதிர்ப்பு உள்ளது. எனவே, அ.தி.மு.க. கூட்டணிக்கு எப்படி ஓட்டுக் கேட்கச் செல்ல முடியும். அதே நேரத்தில் அர்ஜூன்சம்பத், முதல்வரைச் சந்திக்கிறார். ஆனால் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த எங்களால் முதல்வரைச் சந்திக்க முடியவில்லை. எனவேதான் முஸ்லிம் மக்களிடம் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டுக்கேட்பது தொடர்பாக ஆலோசிக்க குழு அமைக்க வேண்டும். எங்களின் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்" என்றார். 

முஸ்லிம் அமைப்புகளை முதல்வர், துணை முதல்வர் சந்திக்கவில்லை என்றால் நீங்கள் ஆதரவை வாபஸ் பெறுவீர்களா என்று கேட்டதற்கு, அ.தி.மு.க. கட்சித் தலைமை எங்களைச் சந்தித்துள்ளது. முதல்வர், துணை முதல்வர் ஆகியோரைச் சந்தித்து எங்களின் கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம்" என்றார். 

 அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரம் நடந்துவருகிறது. ஆனால், பிரசாரத்தில் முஸ்லிம் சமுதாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவளித்த முஸ்லிம் அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் முடங்கியிருப்பதாக முஸ்லிம் அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். எனவே, இந்தத் தேர்தலில் முஸ்லிம் சமுதாய ஓட்டுக்களை பெற முதல்வரும் துணை முதல்வரும் முஸ்லிம் அமைப்புகளுடன் தனியாக ஆலோசனை நடத்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது டோக்கன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்தவர்களை அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் சந்தித்துவருகின்றனர். அப்போது `அ.தி.மு.க. கூட்டணிக்காக உழையுங்கள் உங்களுக்கு வேண்டியது உங்களுக்குக் கிடைக்கும்' என்று கட்சித் தலைமை கழக  நிர்வாகிகள் கூறியுள்ளனர். அதோடு தொகுதி நிலவரங்களையும் கட்சித் தலைமை கழக நிர்வாகிகள் கேட்டறிந்துள்ளனர். முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் முதல்வரைச் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மற்றவர்கள் இன்முகத்துடன் தொகுதி பக்கம் சென்றுள்ளனர்.