கஜா புயல், புல்வாமா தாக்குதலை நினைவுபடுத்திய ஓவியங்கள்! | Art Show Describes Pulwama Attack and Kaja Cyclone

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (21/03/2019)

கடைசி தொடர்பு:17:00 (21/03/2019)

கஜா புயல், புல்வாமா தாக்குதலை நினைவுபடுத்திய ஓவியங்கள்!

மகாத்மா காந்தியின் 150-ம் ஆண்டு பிறந்தநாள் நினைவுகளைப் படைப்பாளிகள், கலையின் வழியே வெளிப்படுத்தியிருந்தார்கள்.  தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்த ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்கள் இந்நிகழ்வில் தம் படைப்புகளை உருவாக்கினார்கள். காந்தியை மட்டுமே மையப்படுத்தாமல், காந்திய தேசத்தின் பண்பாட்டு, ஆன்மிகக் கூறுகள் தொடங்கி இன்றைய பிரச்னைகள் வரை பல  நிகழ்வுகள் காட்சிகளாகி இருந்தன.

ஓவியங்கள்

ஓவியக் காட்சியில் முதன்மையாகக் கவனம் பெற்றது, புல்வாமா தாக்குதலை மையப்படுத்திய ஓவியங்கள். எல்லையில் இருக்கும் முள்வேலிகளுக்கப்பால் சவப்பெட்டி இருக்க, வேலியில் சிக்கி வாடியிருந்தது சிவப்பு ரோஜா. ஓவியர் இதில் எந்த நாட்டையும் குறிப்பிடாமல், ஓர் இழப்பைப் பதிவுசெய்திருப்பார். மேலும், போர் என்பது நரகம், வரிசைகள் நீளும் சவப்பெட்டிகள் போன்ற ஓவியங்கள் போரின் துயரைப் பேசின. அனைத்தும் வீழ்ந்துவிட்டபின், காற்றில் மிதக்கும் இறகாய் தென்னை மட்டையைக் காட்டியிருப்பார்கள். இறுதியாய் இருந்த ஒற்றை நம்பிக்கையையும் அடித்துச்சென்றது கஜா புயல் என்பது அந்த ஓவியம்.

ஓவியங்கள்

இந்திய வானத்தில் மதங்கள் மோதிக்கொள்கின்றன. அதில், சில வண்ணப் புறாக்கள் திசை தெரியாமல் அலைகின்றன என்று, இன்றைய இந்திய நிலையை விவரித்தது ஓர் ஓவியம். மேலும், விவசாயி ஒருவர் மண்டை ஓடுகளைத் தன் நிர்வாண உறுப்பின் முன்வைத்து அமர்ந்திருப்பது, பெண்கள் அடக்குமுறை போன்ற விமர்சனப்பூர்வமான ஓவியங்களும் இடம்பெற்றன. பழங்களால் உருவாக்கப்பட்ட விநாயகர், ஆதிமனிதன் வேடம் தரித்த சிவன் போன்ற ஆன்மிக ஓவியங்களும், பண்பாட்டு ஓவியங்களும் ஆங்காங்கே கவனத்தை ஈர்த்தனர்.

ஓவியங்கள்

கீழே ஒருபுறம் புல்வாமா தாக்குதல், மறுபுறம் கஜா புயல், அதன்மேல் அசோக சக்கரத்தில் தலைமை இடம்பெற்ற காந்தி என்று, மணலால் வடிவமைப்பட்ட சிற்பம் இந்தியத்தின் பல முகங்களைத் தாங்கி நின்றது. மனிதப் பண்பாட்டின் பரிமாணங்கள் தனித்துவமாகக் கல் சிற்பங்களால் வடிவமைக்கப்பட்டிருந்தன. 'மக்களின் நம்பிக்கையையும், தன் எண்ணத்தையும் தம் படைப்பின்மூலம் முழுவதுமாக வெளிப்படுத்துகிறான் கலைஞன். இதுபோன்ற கண்காட்சிகளே அவனின் செயலுக்கு அங்கீகாரமாக அமைகிறது' என்கிறார், ஓவியர் செல்வராஜ்.