அ.தி.மு.க. கூட்டணியில் சரத்குமார்? - எதிர்பார்ப்பில் ச.ம.க தொண்டர்கள்   | Admk wants Sarath kumar in their alliance

வெளியிடப்பட்ட நேரம்: 15:37 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:55 (25/03/2019)

அ.தி.மு.க. கூட்டணியில் சரத்குமார்? - எதிர்பார்ப்பில் ச.ம.க தொண்டர்கள்  

தனித்துப் போட்டியிடுவதாக ச.ம.க தலைவர் சரத்குமார் அறிவித்த நிலையில் அவரை அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் சந்தித்து பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சரத்குமார், என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ச.ம.க தொண்டர்கள் உள்ளனர். 

சரத்குமார்

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை ச.ம.க தலைவர் சரத்குமார் எடுத்துள்ளார். அதையொட்டி போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சரத்குமாரை அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூத்த அமைச்சர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்ததாகத் தகவல் வெளியானது. 

 இதுகுறித்து ச.ம.க.வின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு, ``எங்கள் கட்சித் தலைவரை அமைச்சர்கள் சந்தித்துப் பேசியது உண்மைதான். ஆனால், அவர்கள் கூட்டணி குறித்து பேசினார்களா என்று தெரியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை கட்சித் தலைமை எடுத்துள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடும் ச.ம.கவின் வேட்பாளர்கள் பட்டியல் தயாராக உள்ளது. நாளை மறுநாள் (மார்ச் 23) வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அ.தி.மு.க. கூட்டணி இறுதி செய்யப்பட்ட நிலையில் எப்படி ச.ம.க அங்கு சேர முடியும். இருப்பினும் அ.தி.மு.க.விலிருந்து இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்கும்படி தூது வந்தது. அதற்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்." என்றார். 

சரத்குமார் 

தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் ச.ம.க போட்டியிடவில்லையா என்று அவரிடம் கேட்டதற்கு ``அதற்கு விருப்ப மனு பெறவில்லை. அதுதொடர்பாக கட்சித் தலைமை ஆலோசனை நடத்திவருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்" என்றார். ச.ம.க.வுக்கு எதிராக சில மாவட்ட நிர்வாகிகள் பேசியுள்ளார்களே என்று அவரிடம் கேட்டதற்கு, ``கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள்தான் அவ்வாறு பேசியுள்ளனர். தமிழகத்தில் ச.ம.க பலமாக உள்ளது. இந்தத் தேர்தலில் ச.ம.கவின் செல்வாக்கு தெரியும்" என்றார். 

கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சரத்குமார் ஆதரவளித்தார். ஆனால், ஜெயலலிதா, ச.ம.கவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால் ச.ம.க, இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. தற்போது அ.தி.மு.க. கூட்டணிக்கு சரத்குமார் ஆதரவளித்தால் சிறப்பாக இருக்கும் என அ.தி.மு.க. தலைமை கருதியுள்ளது. அதனால்தான் அவரிடம் கூட்டணி தொடர்பாக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதுதொடர்பாக சரத்குமார் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது தெரியவில்லை. 

``அ.தி.மு.க. கூட்டணியில் தூத்துக்குடி தொகுதியில் பி.ஜே.பி.போட்டியிடவுள்ளது. தென்மாவட்டங்களை பொறுத்தவரை ச.ம.க.வுக்குக் கணிசமான வாக்குகள் உள்ளன. அந்த வாக்குகளைப் பெற பி.ஜே.பியும் ச.ம.கவை கூட்டணியில் சேர்க்க விரும்புகிறது. இதனால்தான் பி.ஜே.பி. ஏற்பாட்டில் ச.ம.கவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. தலைமை நடத்திவருகிறது. ஆனால், ச.ம.க சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக இருக்கும் நேரத்தில் கூட்டணி எனக் கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது ச.ம.கவில் சில நிர்வாகிகள் விரும்பவில்லை.

ச.ம.கவின் செல்வாக்கை தெரிந்துகொள்ள இந்தமுறை தனித்துதான் போட்டியிடவேண்டும் என்ற முடிவை கட்சித் தலைமைக்கு தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், தனித்துப் போட்டியிட்டால் அதை எப்படிச் சமாளிப்பது என்ற கேள்வியும் ச.ம.க தலைமைக்கு உள்ளது. அதுதொடர்பாக நிர்வாகிகளுடன் கட்சித் தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறது. தனித்துப் போட்டி என்றால் இன்னும் சில தினங்களில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இல்லையென்றால் கூட்டணி" என்று சூசகமாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.