பங்குனி உத்திரத் திருவிழா - ராமநாதபுரம் முருகன் கோயில்களில் பக்தர்கள் பரவசம்! | Panguni Uthiram Festival in Ramanathapuram Murugan Temple

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (21/03/2019)

கடைசி தொடர்பு:17:40 (21/03/2019)

பங்குனி உத்திரத் திருவிழா - ராமநாதபுரம் முருகன் கோயில்களில் பக்தர்கள் பரவசம்!

 பங்குனி உத்திரத் திருவிழா நாளில், ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில், ராமேஸ்வரம் மேலவாசல் முருகன் கோயில் மற்றும் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்தி செலுத்தினர். மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமை இருப்பதாக நம்பிக்கை. 12-வது மாதமான பங்குனியும், 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் திருநாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், திருப்பரங்குன்றத்தில் முருகன் தெய்வானையை மணம் முடித்ததாகவும், இந்த நாளில்தான் இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நாளில், நாடெங்கிலும் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களுக்கும் பக்தர்கள் பால், வேல், மயில், பறவைக் காவடி எனப் பல்வகையான காவடிகளை எடுத்துச்சென்று, தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பங்குனி உத்திரத் திருவிழா காவடி எடுத்து வந்த பக்தர்கள்


இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில், ராமேஸ்வரம் மேலவாசல் முருகன் கோயில், குயவன்குடி சுப்பையா ஆலயம், பிரப்பன்வலசை முருகன் கோயில் ரெணபரலி முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களில் உத்திரத் திருவிழா நடைபெற்றது. ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலுக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், வேல் காவடி, மயில் காவடி, பறவைக் காவடி எனப் பல்வேறு வகையான காவடிகள் எடுத்து வந்து நேர்த்தி செலுத்தினர்.

பங்குனி உத்திரத் திருவிழா 1008 சங்காபிஷேகம்


இதேபோல, ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், நடராஜபுரம், கரையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள மேலவாசல் முருகன் சந்நிதிக்கு பால்குடம் எடுத்து வந்தும், உடல்களில் அலகு குத்தியும், தேர் மற்றும் பறவைக் காவடி எடுத்து வந்தும் நேர்த்தி செலுத்தினர். இதையொட்டி, ராமநாதசுவாமி சந்நிதியில் 1008 சங்கு அபிஷேக பூஜையும் நடைபெற்றது.  காவடி எடுத்து வந்த பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பந்தல்களில்  நீர் மோர் வழங்கப்பட்டது. ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள முருகன் கோயில் பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடைசெய்யப்பட்டு மாற்று வழிகளில் திருப்பிவிடப்பட்டன. நாளை (வெள்ளி) அதிகாலை குயவன்குடி சுப்பையா ஆலயத்தில் பங்குனித் திருவிழாவினை முன்னிட்டு தீ இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.