`வெற்றி பெறாவிட்டாலும், முடங்கிவிட மாட்டேன்!' - நீலகிரி பிரசாரத்தில் ஆ.ராசா | a.raja starts election campaign in coonoor

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:55 (25/03/2019)

`வெற்றி பெறாவிட்டாலும், முடங்கிவிட மாட்டேன்!' - நீலகிரி பிரசாரத்தில் ஆ.ராசா

நீலகிரி (தனி) தொகுதியில், மூன்றாவது முறையாக  தி.மு.க சார்பில் களமிறங்கும் வேட்பாளர் ஆ. ராசா, தேர்தல் பிரசாரத்தை குன்னூரில் இன்று தொடங்கினார்.

ராசா

குன்னூர் அண்ணா சிலை முன்பு திறந்த வாகனத்தில் வந்த ஆ. ராசாவை விடுதலைச் சிறுத்தை, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட  கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தி.மு.க தொண்டர்கள் என ஏராளமானாேர் வரவேற்றனர். திறந்த வாகனத்தில் நின்று பொதுமக்கள் மத்தியில் பேசிய ஆ.ராசா, ``ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தில் மதச் சார்பற்ற ஜனநாயகக் கூட்டணி சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளார்கள். கடந்த 2009-ல் முதல் முதலாக அப்பாேதைய முதல்வர் கருணாநிதி என்னை நீலகிரி தாெகுதிக்கு அனுப்பிவைத்தார். அப்போது, பெரம்பலூரைச் சேர்ந்த உங்களுக்கு நீலகிரி அன்னியம் அல்லவா என்று கேட்டார்கள். அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே, பெரம்பலூர் எனக்கு பிறந்த வீடு என்றால் நீலகிரி எனக்குப் புகுந்த வீடு எனப் பதில் அளித்தேன்.

பிரசாரம்

அதேபோல, அந்தத் தேர்தலில் வெற்றிபெற்று ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன். இந்த மக்களுடன் இணைந்தும் பணியாற்றினேன். நீலகிரி மலையிலும் சமவெளிப் பகுதியினைக் கொண்ட தொகுதியில் கூடலூர், ஊட்டி, குன்னூர் ஆகிய பகுதிகளுக்கு ஒரு அலுவலகமும் மற்றும் அவிநாசி, பவானி, மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு ஒரு அலுவலகமும் என ஒரு தொகுதிக்கு இரண்டு அலுவலகங்களை அமைத்துப் பணியாற்றிய ஒரே அமைச்சர் நான்தான்.  கருணாநிதி கூறுவார், தமிழர்களே தமிழர்களே, நீங்கள் விரட்டினால் ஓடுவதற்கு நாங்கள் தெரு நாய்கள் அல்ல.  நீங்கள் விரட்டியடித்தாலும் வீட்டைப் பாதுகாக்கும் உங்கள் வீட்டுநாய் என்பார்.

அதேபோல, வெற்றி வாய்ப்பை இழந்தபோதும் நான் பெரம்பலூருக்கு ஓடிவிடவில்லை. உங்களால் நான் நிராகரிக்கப்பட்டாலும், உங்களால் நான் வெற்றிபெற இயலாவிட்டாலும் நான் முடங்கிப் போய்விடவில்லை. உங்களால் தோற்கடிக்கப்பட்டாலும் தொகுதிக்காக தொடர்ந்து பணியாற்றிவந்துள்ளேன். அந்த உரிமையில் ஸ்டாலின் மீண்டும் என்னை அனுப்பிவைத்துள்ளார். இம்முறை என்னைத் தேர்ந்தெடுத்துப் பணியாற்ற உத்தரவு தாருங்கள். கடந்த தேர்தல்களைக் காட்டிலும் கூடுதல் உற்சாகத்துடனும், சுறுசுறுப்புடனும் பணியாற்றுவேன்’’என்றார். அதைத் தாெடர்ந்து, குன்னுாரில் தி.மு.க தேர்தல் அலுவலகத்தைத் திறந்துவைத்தார்.