`ஆர்.கே.நகர் ஃபார்முலாவைப் பயன்படுத்துவோம்!' - அ.ம.மு.க வேட்பாளர் ராஜசேகர் பேச்சு | Will use R nagar formula for victory says Perambalur ammk candidate Rajasekar

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:55 (25/03/2019)

`ஆர்.கே.நகர் ஃபார்முலாவைப் பயன்படுத்துவோம்!' - அ.ம.மு.க வேட்பாளர் ராஜசேகர் பேச்சு

``அ.தி.மு.க-வினரை விட நாம் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. அ.தி.மு.க-வினர், ஆட்சிக்கட்டிலில் நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பயமே நமக்கு சாதகம்தான். எளிதில் வெற்றிபெறலாம்'' என  வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் ராஜசேகர் அதிரடியாகப் பேசியதோடு, அ.தி.மு.க-வை கடுமையாக விமர்சனம்செய்தார்.

அமமுக வேட்பாளர்

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் சார்பாக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர் களமிறக்கப்பட்டுள்ளார். அதேபோல, தி.மு.க  கூட்டணிக் கட்சியான ஐ.ஜே.கே பாரிவேந்தர் களம் இறங்கியுள்ளார். இந்த நிலையில், பெரம்பலூர் துறைமங்கலம் கட்சி அலுவலகத்தில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் ராஜசேகர் கலந்துகொண்டு கடுமையாகப் பேசத்தொடங்கினார்.

ராஜசேகரன்

``அ.தி.மு.க-வினரைவிட நாம் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை.அங்குள்ளவர்கள் எல்லோரும் ஊழல் கறைபடிந்தவர்கள் . ஆட்சிக்கட்டிலில் நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.  அதுமட்டுமில்லாமல்,  பி.ஜே.பி-யின்மீது மக்கள் மத்தியில் கடுமையாக எதிர்ப்பலைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. பா.ம.க,தே.மு.தி.க பிரச்னைகள் என எல்லாமே நமக்கு சாதகமாக இருக்கிறது. பொள்ளாச்சி விவகாரத்தால் ஆளும் கட்சியினர் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.

இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளைச் சுட்டிக்காட்டி, மக்களிடம் ஓட்டு கேட்டு சென்றாலே, நமக்குப் பாதி வெற்றிதான். மீதி வெற்றியை ஆர்.கே. நகரில் பயன்படுத்திய ஃபார்முலாவை இங்கும் பயன்படுத்துவோம்'' என்று அ.தி.மு.க தொண்டர்களைக் கக்‌ஷிப்படுத்திவிட்டு சென்றார். ஆர்.கே நகர் ஃபார்முலாவா? என தொண்டர்கள் பலரும் சந்தோஷத்தில் மூழ்கியிருக்கிறார்கள். அ.ம.மு.க மாநில அமைப்புச் செயலாளரும், திருச்சி, பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிகளுக்கான பொறுப்பாளருமான மனோகரன், மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், அரும்பாவூர் கண்ணு சாமி, தழுதாழை சேகர், பாடாலூர் வீர முத்து உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.