அன்று திருநாவுக்கரசு பொள்ளாச்சியில் இல்லை!"- திடீரெனத் திசை மாறும் பொள்ளாச்சி வழக்கு | controversy statement given by thirunavukarasu in Pollachi sexual abuse issue

வெளியிடப்பட்ட நேரம்: 17:56 (21/03/2019)

கடைசி தொடர்பு:17:56 (21/03/2019)

அன்று திருநாவுக்கரசு பொள்ளாச்சியில் இல்லை!"- திடீரெனத் திசை மாறும் பொள்ளாச்சி வழக்கு

பொள்ளாச்சி வழக்கு மயூரா ஜெயக்குமார்

"தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு, திடீர் திருப்பத்தைச் சந்தித்துள்ளது. 'புகார் கொடுத்த  கல்லூரி மாணவி பாதிக்கப்பட்டதாக எஃப்.ஐ.ஆரில் பதிவுசெய்யப்பட்ட 12-ம்தேதி, நான் பொள்ளாச்சியிலேயே இல்லை' என்று திருநாவுக்கரசு சிபிசிஐடி போலீஸிடம் வாக்குமூலம் கொடுத்திருந்தார். அதை நிரூபிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் சிபிசிஐடி-யிடம் எழுத்துப்பூர்வ வாக்குமூலம் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது"

பொள்ளாச்சியில், பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பாகக் கைதுசெய்யட்ட நான்கு பேரில், முக்கியக் குற்றவாளியான மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசை  சிபிசிஐடி காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனர். பிப்ரவரி12-ம் தேதி மதியம் 1மணிக்கு,ஊஞ்சம்வேலப்பட்டி சாலையில், கல்லூரி பெண் ஒருவரை  காரில் வைத்து வலுக்கட்டாயமாக ஆபாசமாகப் படம் எடுத்தாகப் பதியப்பட்ட வழக்கில்தான் திருநாவுக்கரசு உட்பட நான்கு பேர்  கைதுசெய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழகம் கொந்தளித்தது.
 
இந்நிலையில்தான், பிப்ரவரி 12-ம் தேதி,  நான் பொள்ளாச்சியிலேயே இல்லை.  காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவராக பொறுப்பேற்ற மயூரா ஜெயகுமாருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக எனது அப்பாவோடு கோவைக்குச் சென்றிருந்தேன்' என  சிபிசிஐடி விசாரணையில் திருநாவுக்கரசு வாக்குமூலம் அளித்து அதிர்ச்சிக் கொடுத்திருந்தார். திருநாவுக்கரசு சொல்வது உண்மையா என உறுதிப்படுத்துவதற்காக  மயூரா ஜெயக்குமாருக்கு  சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்திருந்தது சிபிசிஐடி.

மயூரா ஜெயக்குமார்

விசாரணையை முடித்துவிட்டு வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த மயூரா ஜெயக்குமார், " எனக்கு பிப்ரவரி 2-ம் தேதி, மாநில பொறுப்பு  கிடைத்தது. அதனையடுத்து சில நாள்களுக்குப் பிறகுதான் நான் கோவைக்கு வந்தேன்.  கட்சியினர், தொண்டர்கள், தொழிதிபர்கள் பலர் என்னை கட்சி  அலுவலகத்தில் தொடர்ச்சியாக  சந்தித்து வாழ்த்திக்கொண்டிருந்தார்கள். அந்த வகையில், பிப்ரவரி 12-ம் தேதி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர், காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் என்னை வந்து சந்தித்து வாழ்த்தினர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு, அவரது தந்தை கனகாரஜுடன் 12-ம்தேதி, எனக்கு வாழ்த்து தெரிவிக்க கோவை வந்திருந்ததாகவும், சம்பவம் நடந்ததாக எஃப்.ஐ.ஆரில் சொல்லப்படும் 12-ம் தேதி நான் பொள்ளாச்சியிலேயே இல்லை என்றும் சிபிசிஐடி போலீஸிடம் திருநாவுக்கரசு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக விசாரிக்கத்தான் என்னை சம்மன் அனுப்பி வரச்சொல்லியிருந்தார்கள், திருநாவுக்கரசையோ அவரது தந்தை கனகராஜையோ எனக்கு நேரடியாகத் தெரியாது. அவர்கள் முகம் எப்படி இருக்கும் என்றும் எனக்குத் தெரியாது. சிபிசிஐடி சம்மன் அனுப்பிய பிறகுதான் 12-ம்தேதி திருநாவுக்கரசும் அவரது தந்தை கனகராஜும் என்னை சந்திக்க வந்துள்ளார்கள் என்ற தகவல் தெரிந்தது. ஆனால், என்னால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை. எனக்கு அவர்களை தனிப்பட்ட முறையில் தெரியாது என்பதால் நினைவில் இல்லை.

பொள்ளாச்சியிலிருந்து ஆட்களை அழைத்து வந்த காங்கிரஸ் பிரமுகர் ராஜசேகரை அழைத்து விசாரித்தேன். திருநாவுக்கரசும் அவரது தந்தை கனகராஜும் அன்றைய தினம் வந்திருந்தார்கள் என்று சொன்னார். அவர் சொன்னதை நான் சிபிசிஐடி-யிடம் சொல்லிவிட்டேன். தவிர, திருநாவுக்கரசுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பழைய காங்கிரஸ் உறுப்பினர் என்கிற அடிப்படையில், கனகராஜ் தனது மகனோடு வந்துள்ளார். அதுவும் நேரடியாக எனக்குத் தெரியாது. பொள்ளாச்சியிலிருந்து அழைத்து வந்த ராஜசேகருக்குத்தான் தெரியும். இந்த  வழக்கை பொறுத்தவரையில் நான் ஒரு சாட்சிதான். என்னை  எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வருவதற்குத் தயாராக உள்ளேன்" என்றார்

மேலும், திருநாவுக்கரசையும் அவரது தந்தையையும் கோவையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு அழைத்துவந்த  ராஜசேகர் பேசியபோது, "12-ம் தேதி மயூரா ஜெயகுமாருக்கு வாழ்த்து தெரிவிக்க,  சுமார் 20-க்கும் மேற்பட்டோர்  பொள்ளாச்சியிலிருந்து10 மணிக்கு புறப்பட்டோம். கட்சி அலுவலத்தில் செயல் தலைவராகப் பதவியேற்றிருந்த மயூரா ஜெயக்குமாரைச் சந்தித்துவிட்டு, அனைவரும் மதியம் 2.30-க்கு பொள்ளாச்சிக்கு புறப்பட்டோம். எங்களுடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினரான கனகராஜும் அவரது மகன் திருநாவுக்கரசும் வந்திருந்தார்கள்.  இது தொடர்பான விசாரணைக்கு சிபிசிஐடி அழைத்தால் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க