இரண்டாயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவித் திட்டம் நிறுத்திவைப்பு! - நீதிமன்றத்தில் அரசு தகவல் | two thousand rupees special assistance scheme stopped for elections, says tn government

வெளியிடப்பட்ட நேரம்: 18:18 (21/03/2019)

கடைசி தொடர்பு:18:21 (21/03/2019)

இரண்டாயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவித் திட்டம் நிறுத்திவைப்பு! - நீதிமன்றத்தில் அரசு தகவல்

மக்களவைத் தேர்தலையொட்டி,  2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஐகோர்ட்

 
வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்களை அடையாளம் காணும் வரை 2000 ரூபாய் நிதியுதவித் திட்டத்துக்கு  தடை விதிக்கக் கோரி, விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ``ஏழை மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குவதை எதிர்க்கவில்லை. இதற்காக அரசு மேற்கொள்ளும் நடைமுறையை மட்டுமே  எதிர்ப்பதாக'' மனுவில் கூறப்பட்டுள்ளது. முதலில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனக் கூறிய அரசு, தேர்தல் ஆதாயத்திற்காகத் தற்போது, குடும்ப அட்டைதாரர்கள் அனைவரின்  விவரங்களையும் சேகரிக்கும் வகையில் தற்போது படிவங்களை விநியோகித்துவருவதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழக அரசு

வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்களை அடையாளம் காண பல்வேறு விதிகளை வகுத்து, 2007ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையைப் பின்பற்றி, சிறப்பு உதவித்தொகை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, பயனாளிகளைக் கண்டறிய சரியான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதாகக் கூறி மனுவைத்தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அரசாணை போலி என அரசுத் தலைமை வழக்கறிஞர் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால்,  அரசாணையைத் திருத்தி,  அதிகாரிகள் வெளியிட்டுள்ளதாகக் கூறி, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருணாநிதி தரப்பில் புது மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு முன் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது வரைவு அரசாணை என்றும், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதே இறுதி அரசாணை என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், தலைமைச் செயலகத்தில் இருந்து அரசாணை ஆவணம் வெளியானதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். மக்களவைத் தேர்தல் காரணமாக, 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவதும், அதற்கான கணக்கெடுக்கும் பணியும் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையைத் தேர்தலுக்குப் பின்னர்  தள்ளிவைத்தனர்.