`மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலோடு காணாமல் போய்விடும்!’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி | Kamalhassan's MNM Will disappear after this election, says Minister Rajendra balaji

வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:56 (25/03/2019)

`மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலோடு காணாமல் போய்விடும்!’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

'மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலோடு காணாமல் போய்விடும்' என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

ராஜேந்திர பாலாஜி

சாத்தூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் ராஜவர்மன் மற்றும் விருதுநகர் மக்களவைத் தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமிக்கு ஆதரவாக, சாத்தூரில் முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து தமிழகப் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆதரவு திரட்டினார். அப்போது அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ``தமிழ்நாட்டின் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள 24 மாவட்டங்களுக்கும் தேர்தல் முடிந்தவுடன் உரிய நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும். சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் வழங்கிவருகின்றன. அய்யாக்கண்ணு, விவசாயிகளை இழிவுபடுத்திவருகிறார். கமலின் மக்கள் நீதி மய்யத்தில் நிர்வாகிகளே இல்லை. அந்தக் கட்சி இந்தத் தேர்தலோடு காணாமல் போய்விடும். இந்தத் தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க-வின் அரசியல் அதிகாரம் டெல்லி வரை செல்லும்.

கமல்

தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த், உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, அவர் பிரசாரத்துக்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை. அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வார்கள். சாத்தூர் இடைத்தேர்தலுக்காக, வரும் 25-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளோம்’’ என்று தெரிவித்தார்.