கூட்டணிக் கட்சியின் சின்னத்தில் வேட்பாளர்கள் நிற்கலாமா? - உயர் நீதிமன்றத்தில் வழக்கு | Petition questioning about coalition candidates contesting in other party symbols

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:57 (25/03/2019)

கூட்டணிக் கட்சியின் சின்னத்தில் வேட்பாளர்கள் நிற்கலாமா? - உயர் நீதிமன்றத்தில் வழக்கு

கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடுவதைத் தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

வேட்பாளர்கள்

'அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சின்னத்தில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள்  போட்டியிட அனுமதிக்கக் கூடாது' எனத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், `தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்துள்ள  அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர், தாங்கள் வேறு  எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லை என்ற உத்தரவாதம் அளித்து தங்களுக்கான சின்னம் பெறுகின்றனர். ஆனால், தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் மாற்றுக் கட்சி வேட்பாளர்கள்,  அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தில்  போட்டியிட அனுமதிக்கின்றனர். இது, ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை வேறு கட்சியினருக்கு வழங்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ள தேர்தல் விதிமுறை, ``Form B”-க்கு எதிரானது’ என வாதிட்டார். 

வேட்பாளர்கள்

இதற்குப் பதிலளித்து, தேர்தல் ஆணையத் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் வாதிடுகையில், `தேர்தல் சின்னம் ஒதுக்கீடு சட்டத்தின்படி, தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு, வேட்பாளர்கள் கூட்டணிக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதிப்பதா, நிராகரிப்பதா என்பதை முடிவுசெய்ய அதிகாரம் உள்ளது’ எனத் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கைபடி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடிசெய்தது.