`மதுரை ஆதீனத்தின் கருத்து ஆதாரமற்றது!' - அ.தி.மு.க இணைப்புகுறித்து டி.டி.வி. தினகரன் | Ttv dinakaran joint admk at aadhinam

வெளியிடப்பட்ட நேரம்: 19:23 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:57 (25/03/2019)

`மதுரை ஆதீனத்தின் கருத்து ஆதாரமற்றது!' - அ.தி.மு.க இணைப்புகுறித்து டி.டி.வி. தினகரன்

'பொள்ளாச்சி சம்பவத்துக்கும் இந்தத் தேர்தல் பிரசாரத்துக்கும் சம்பந்தம் இல்லை. தினகரன் அணிக்கும்,  ஈ.பி.எஸ் அணிக்கும் இடையே சமரச  பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. விரைவில் தினகரன் அ.தி.மு.க-வில் இணைவார்' என கும்பகோணத்தில்  மதுரை ஆதீனம் தெரிவித்தார்.

மதுரை ஆதினம்

கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் சாட்சிநாதர் கோயிலுக்கு வந்த மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,  ``நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும். ஆரம்பத்திலிருந்து மோடிக்கு நான் ஆதரவாகத்தான் கருத்துகளைத் தெரிவித்துவருகிறேன். அவருக்கு எதிராக நான் பேசியதில்லை.தேர்தல் பிரசாரத்துக்கு என்னை முறைப்படி அழைத்தால் பிரச்சாரம் செய்வேன். கடந்த 40 ஆண்டுகளாக ஆதீனத்தில் அரசியலில் கட்சிகளை ஆதரித்துக்கொண்டிருக்கிறோம். ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும் உள்ளோம். புதிதாக ஆதீனம் அரசியலுக்கு வரவில்லை. பா.ஜ.க-வின் சாதனைகள், அ.தி.மு.க ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி, தேர்தலில் மக்களிடம் வாக்குகள் சேகரிப்போம். இதில் பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணிதான் வெற்றிபெறும். இந்தத் தேர்தலில் பொள்ளாச்சி சம்பவத்துக்கும் இந்தத் தேர்தல் பிரசாரத்துக்கும் சம்பந்தம் இல்லை.

தினகரன்

அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்ற பலரும், மீண்டும் அ.தி.மு.க-விற்கு வருவார்கள், இடைக்காலத்திலேயே அவர்கள் புரிந்து கொள்ளாமையின் காரணமாக, அவசரத்தின் காரணமாக, பொறுமை இல்லாமல் அவர்கள் பிரிந்துசென்றுள்ளனர். அவர்கள் மீண்டும், இரட்டை இலை சின்னத்தை உணர்ந்து அ.தி.மு.க ஆட்சியின் சாதனைகளைப் புரிந்து, ஜெயலலிதாவிற்காத மீண்டும் அவர்கள் அ.தி.மு.க-வுக்கு வந்து சேருவார்கள் என்பது உறுதி. அவர்கள் பிரிந்து சென்றுள்ளதால், தற்போது அ.தி.மு.க-வுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அப்படி பிரிந்துசென்றவர்கள், அ.தி.மு.க-வுக்கு எதிராகவும் செயல்பட மாட்டார்கள். பிரிந்துசென்ற தினகரன் அணிக்கும், ஈ.பி.எஸ் அணிக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக தினகரன் அ.தி.மு.க-வில் இணைவார் என்பது உறுதி.
தினகரன் பொறுமைசாலி. நல்ல பண்பாளர், அவருடைய வெற்றி இறைவன் கையில் உள்ளது. அடுத்த பிரதமராக மோடி தான் வருவார். இதிலே ஆட்சேபனை ஏதும் இல்லை. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. தொடர்ந்து அ.தி.மு.க- தான் ஆட்சி செய்யும்'' என்றார். இந்நிலையில், மதுரை ஆதினத்தின் கருத்தை மறுத்துள்ள டி.டி.வி.தினகரன், ``அ.தி.மு.க-வில் இணைப்பதற்காக தினகரனுடன் சமரசப் பேச்சு நடந்துவருவதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது. அது உண்மையும் அல்ல. அதற்கு அவசியமும் இல்லை!'' என்று தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க