``கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியா, மோகன் குமாரமங்கலமா?’’ - பரபரக்கும் ஹாட் டாபிக்! | Karur constituency Congress candidate Jothimani or Mohan Kumaramangalam?

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:58 (25/03/2019)

``கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியா, மோகன் குமாரமங்கலமா?’’ - பரபரக்கும் ஹாட் டாபிக்!

 காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளுக்கு, இன்னமும் அந்தக் கட்சியின் தலைமை, வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. அதற்குள், 'கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஜோதிமணிதான்' என்று ஒருதரப்பும், 'இல்லை இல்லை. மோகன் குமாரமங்கலம்தான் வேட்பாளர்' என்று மற்றொரு தரப்பும் பரபர பேச்சை பந்திவைத்துவருகிறது.

 ஜோதிமணியை வேட்பாளராக்கிய ஃபேஸ்புக் பதிவு

 ஜோதிமணிஏப்ரல் 18-ம் தேதி, தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக,
தமிழகத்தில் உள்ள பிரதானக் கட்சிகள், மற்றக் கட்சிகளோடு கூட்டணி வைத்து, தேர்தலை சந்திக்கத் தயாராகிவருகின்றன. பல கட்சிகள் தங்கள் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து, பிரசாரத்திற்கேபோய்விட, சில கட்சிகள் இன்னமும் வேட்பாளர்களை அறிவிக்காமல் திணறி வருகிறது. காங்கிரஸ் கட்சி அப்படி வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் காலம்தாழ்த்திவருகிறது. கரூர் நாடாளுமன்றத் தொகுதியும், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

வேட்பாளரே அறிவிக்காத நிலையில், கடந்த வெள்ளியன்றே சமூக வலைதளங்களில், 'காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரிப்பீர்' என்று பதிவுகள் உலாவரத் தொடங்கின. தி.மு.க கரூர் மாவட்ட அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் இந்த ரீதியில் பதிவுகள் போடப்பட்டன. 
 இதனால், ஜோதிமணியின் எதிர்க் கோஷ்டியான முன்னாள் மாவட்டத் தலைவர் பேங் சுப்ரமணி தரப்பு, 'ஜோதிமணிக்கு சீட் தரக் கூடாது. பேங்க் சுப்ரமணிக்குதான் தரணும்' என்று பரபரப்பை ஏற்படுத்தினார்கள். முன்னாள் எம்.எல்.ஏ ராமநாதன் தரப்பு ஜோதிமணிக்கு எதிராகக் கூட்டம்போட்டு, 'ஜோதிமணிக்கு சீட் தரக் கூடாது' என்று தீர்மானமே நிறைவேற்றியது. மூன்றாவதாக, காங்கிரஸ் கமிட்டியில் விவசாய அணி மாநிலச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் தரப்பு, 'ஜோதிமணிக்கு சீட் கொடுத்தால், கரூரை மறந்திடவேண்டியதான்' என்று பேட்டிகொடுத்தனர். அதோடு, ஜெயப்பிரகாஷ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும், 30-க்கும் மேற்பட்ட தொண்டர்களும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க-வில் ஐக்கியமாகிவிட்டார்கள். இந்நிலையில்தான், "கட்சித் தலைமை கரூரில் ஜோதிமணிக்கு எழுந்துள்ள எதிர்ப்பை பார்த்துவிட்டு, ஜோதிமணிக்குப் பதிலாக காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலத்திற்கு சீட் வழங்க இருக்கிறது. அநேகமாக, நாளை வேட்பாளரை அறிவித்துவிடுவார்கள்" என்கிறார்கள் காங்கிரஸார் சிலர்.

 நம்மிடம் பேசிய அவர்கள், "ஜோதிமணி படித்தவர்; திறமையானவர்; ராகுலுக்கு நெருகமானவர்; அரசியலில் நேர்மையானவர் எனப் பல தகுதிகள் இருக்கு. ஆனால், கரூர் மாவட்ட அவரது எதிர்க் கோஷ்டிகள், அவருக்கு சீட் கொடுப்பதை விரும்பவில்லை. முன்னாள் மாவட்டத் தலைவர் பேங்க் சுப்பிரமணி, 'தான் வகித்த மாவட்டத் தலைவர் பதவியைப் பறித்து, அதை சின்னசாமி என்பவருக்கு ஜோதிமணி கொடுக்கவைத்தார்' என்ற தீராத கோபத்தில் இருக்கிறார். அதனால், 'கரூர் எம்.பி சீட்டையாவது வாங்கிவிடணும்' என்று அவர் முயற்சிசெய்தார். அதற்கு ஜோதிமணி மூலம் பிரச்னை வரவேதான், அவருக்கு எதிராக இத்தனையும் கிளப்பிக்கொண்டிருக்கிறார். இது ஒருபுறமிருக்க, ஜோதிமணிக்கு எதிராக பலரும் கொடிபிடிப்பதால், 'பேசாமல் மோகன் குமாரமங்கலத்தை வேட்பாளராக ஆக்கிடலாம்'னு கட்சித் தலைமை நினைக்கிறதா சொல்றாங்க. 


 மோகன் குமாரமங்கலம்சேலம் தொகுதி தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டதால், கரூர் தொகுதியில் சீட் கேட்டு பணம் கட்டியிருந்தார் மோகன் குமாரமங்கலம். 'எப்படியும் ஜோதிமணிக்குதான் சீட்' என்று அதற்கு மேல் எந்த முயற்சியையும் செய்யாமல் இருந்த அவர், திடீரென ஒரு சமூக நல அமைப்பின் நிர்வாகி இருவரை விட்டு, கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய பயன்படுத்தும் படிவத்தை வாங்கச் சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களை வாங்கச் சொல்லாமல், ஒரு அமைப்பைச் சேர்ந்தவரை விட்டு ரகசியமாக வாங்கச்சொல்லி இருப்பதை வைத்தே, 'மோகன் குமாரமங்கலம்தான் வேட்பாளர்'னு பரபரப்பு ஏற்பட்டிருக்கு. இன்னொருபக்கம், 'நான்தான் வேட்பாளர்' என்று தொகுதி முழுக்க உள்ள காங்கிரஸ் மற்றும் தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிப் புள்ளிகளை மரியாதை நிமித்தமாக ஜோதிமணி சந்தித்து வருகிறார். வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டால், இந்தக் குழப்படிகள் குறைந்துவிடும்" என்றார்கள்.