`எங்கள் எம்.பி-க்களை பொதுமக்கள் எளிதில் அணுகலாம்!' - உழவர் உழைப்பாளர் கழகம் | Our party MPs can be easily accessible to the public says ulavar ulaipalar kazhagam

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:59 (25/03/2019)

`எங்கள் எம்.பி-க்களை பொதுமக்கள் எளிதில் அணுகலாம்!' - உழவர் உழைப்பாளர் கழகம்

பாராளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உள்பட 6 பாராளுமன்றத் தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்திற்கு டிபன் கேரியர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.       

 டிபன் கேரியர் சின்னத்தை அறிமுகப்படுத்தும் ஜோதிகுமார்


 ஏப்ரல் 18-ம் தேதி,  மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக, தமிழகத்தில் உள்ள பிரதானக் கட்சிகள், மற்றக் கட்சிகளோடு கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திக்கத் தயாராகிவருகின்றன. பல கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தைத் துவக்கிவிட்டன. காங்கிரஸ் கட்சி மட்டும் இன்னமும் வேட்பாளர்களை அறிவிக்காமல் காலம் தாழ்த்திவருகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஆறு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும், தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்திற்கு டிபன் கேரியர் சின்னம் கிடைத்திருக்கிறது. கரூரில் இன்று, தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜோதிகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து, சின்னத்தை அறிமுகம்செய்தார்.

டிபன் கேரியர் சின்னத்தை அறிமுகப்படுத்தும் ஜோதிகுமார்...

அப்போது செய்தியாளரிடம் அவர், "தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் தேர்தல் ஆணையத்தால் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியாகும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பே பொதுச்சின்னம் கோரி விண்ணப்பித்திருந்தோம். அதனைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம், எங்கள் கழகத்திற்கு டிபன் கேரியர் சின்னம் ஒதுக்கியுள்ளது. எனவே, தேர்தல் ஆணையத்துக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னுதாரணமாக தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் எம்.பி-க்கள் செயல்பட உள்ளனர்.

பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக எங்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயல்படுவார்கள். விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் முன்னேற்றத்தை உறுதிசெய்திடவும், விவசாயிகள் தற்கொலைகள் இல்லாத தமிழகமாக உருவாக்க, தமிழகத்தில் மக்கள் பணியாற்றுவோம். மேலும், தமிழகத்தில் மீண்டும் விவசாயப் புரட்சியை உருவாக்க, தேசிய நதிநீர் இணைப்பை சாத்தியமாக்க, டிபன் கேரியர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பணியாற்றுவோம். மேலும், கரூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை வளமையாக்க, மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் உபரிநீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தி வளமாக்குவோம். தமிழக நீர்நிலைகளில் சாயக்  கழிவுநீர் கலக்காமல் தடுத்திடுவோம். நான் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறேன்" என்றார்.