``தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை கதாநாயகன்; வில்லன் மோடி” - உதயநிதி ஸ்டாலின் | Udhayanidhi Stalin criticise Modi and ADMK party

வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (22/03/2019)

கடைசி தொடர்பு:09:20 (22/03/2019)

``தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை கதாநாயகன்; வில்லன் மோடி” - உதயநிதி ஸ்டாலின்

``மோடி ஒரு என்.ஆர்.ஐ பிரதமர். கோமாளி சர்வாதிகாரி. அவரின் அடியாட்கள் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும். இவர்களின் கேவலமான கூட்டணியில் ராமதாஸும் அவரின் மகன் அன்புமணியும் காமெடியன்கள்’’ என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

வேலூரில், துரைமுருகன் மகனுக்கு வாக்குசேகரித்த உதயநிதி ஸ்டாலின்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி, தி.மு.க வேட்பாளரான துரைமுருகன் மகன் கதிர்ஆனந்தை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் நேற்று (21-ம் தேதி) மாலை, வேலூர் மண்டித் தெருவில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘மோடி, இந்தியாவின் பிரதமரே இல்லை. என்.ஆர்.ஐ பிரதமர். ஆண்டுக்கு 10 நாள்கள் மட்டும் இந்தியாவில் இருந்துவிட்டு, வெளிநாடு சென்றுவிடுகிறார். கடந்த நான்கரை ஆண்டுகளில் 55 நாடுகளுக்கு 48 முறை சென்றுவந்திருக்கிறார். தமிழகத்துக்கு 4 ஆண்டுகளில் ஒருமுறைகூட வரவில்லை. தேர்தல் அறிவித்த பிறகுதான், இந்த ஒரு மாதத்தில் மூன்றுமுறை வந்துசென்றிருக்கிறார். புயல் பாதிப்புகள் போன்ற இன்னல்கள் வந்தபோதும் தமிழ்நாட்டுக்கு மோடி வரவில்லை. 

வர்தா புயல் சேதம் ரூ.10,000 கோடி. ஆனால், மோடி கொடுத்தது வெறும் ரூ.266 கோடிதான். ஒகி புயலுக்கு ரூ.13,520 கோடி கேட்டோம். அவர், ஒதுக்கியது ரூ.137 கோடிதான். அதேபோல், கடைசியாக வந்த கஜா புயல் பாதிப்புக்கு ரூ.15,000 கோடி இழப்பீடு கேட்டோம். ரூ.500 கோடியை மட்டும் கொடுத்த மோடி, அவரின் குஜராத் மாநிலத்தில் ரூ.3,000 கோடிக்கு சர்தார் வல்லபபாய் படேலுக்கு மிகப்பெரிய சிலை அமைத்தார். படேல் சிலையைச் செய்தவர்களுக்குக்கூட மூன்றுமாதமாகச் சம்பளம் தரவில்லை. கடந்த ஒரு வாரமாக ‘சௌகிதார்’ என்று தன்னை அழைக்கச் சொல்கிறார் மோடி. ‘சௌகிதார்’ என்றால் காவலாளி என்று அர்த்தம். மோடி, காவலாளி கிடையாது. அவர் ஒரு கோமாளி சர்வாதிகாரி. 

வேலூரில், துரைமுருகன் மகனுக்கு வாக்குசேகரித்த உதயநிதி ஸ்டாலின்.

இரவோடு இரவாகப் பணமதிப்பு இழப்பு கொண்டுவந்து, நாடு முழுவதும் வங்கி, ஏ.டி.எம் மையங்களில் காத்திருக்க வைத்து 150 பேரை கொலை செய்திருக்கிறார். தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன். இதற்கு வில்லன் மோடி. அடியாட்களாக எடப்பாடி, ஓ.பி.எஸ் உள்ளனர். ராமதாஸ், அன்புமணி காமெடியன்கள். கூவத்தூரில் எல்லோரையும் கடத்திவைத்து சசிகலா காலில் தவழ்ந்து ஆட்சியைப் பிடித்தவர் எடப்பாடி பழனிசாமி. கடந்த வாரம் வரை எடப்பாடி பழனிசாமியை டயர் நக்கி, கவுன்சிலர் ஆகவும் லாயக்கு இல்லாதவர் என்று விமர்சித்தார் அன்புமணி ராமதாஸ். திடீரென்று, இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சியை எடப்பாடி செய்துவருகிறார் என்று அன்புமணி கூறுகிறார். எவ்வளவு கேவலமானவர்கள் கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது. அம்மா இட்லி சாப்பிட்டாங்க... சட்னி தொட்டுச் சாப்பிட்டாங்க... என்று சொன்னவர்கள், திடீரென்று ஒரு நாள் அந்தம்மா இறந்துவிட்டாங்கனு சொன்னாங்க... முதலமைச்சரே மர்மமாக இறந்திருக்கிறார், சாமானிய மக்களுக்கு எப்படிப் பாதுகாப்பு இருக்கும். எனவே, வேலூர் தொகுதியில் கதிர்ஆனந்தை பெருவாரியான வாக்குகளில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தால் மட்டுமே மோடி என்கிற கேடியின் ஆட்சியை அகற்ற முடியும்’’ என்றார் காட்டமாக.