``மோடியின் பேரன் ராகுல் காந்தி” - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் அடுத்த சர்ச்சை | Modi's grandson Rahul Gandhi Minister Dindigul Srinivasan's speech

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (22/03/2019)

கடைசி தொடர்பு:10:30 (22/03/2019)

``மோடியின் பேரன் ராகுல் காந்தி” - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் அடுத்த சர்ச்சை

இந்திரா காந்தியின் பேரன் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்பதற்குப் பதிலாக மோடியின் பேரன் ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடுவதாக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் உளறிக்கொட்டினார்.

திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நத்தம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் அ.தி.மு.க கூட்டணிக்கட்சியான பா.ம.க-வின் வேட்பாளர் அறிமுகம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஒரு கட்டத்தில் தூக்கத்தை அடக்க முடியாமல் தூங்கி வழிந்தார் அமைச்சர் சீனிவாசன். அதன் பிறகு பேசியவர், ``தற்போது பிரதமராக இருக்கக்கூடிய மோடி போட்டியிடுகிறார். அவருடைய பேரனாக இருக்கிற ராகுல் காந்தியும் போட்டியிடுகிறார். இரு துருவங்களுக்கு இடையே இந்திய நாடு முழுவதும் ஓட்டு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்று உளறினார்.

தொடர்ந்து பேசியவர், ``அ.தி.மு.க கோட்டை திண்டுக்கல். அதைப்போய் கூட்டணிக்கட்சியான பா.ம.க-வுக்கு விட்டுக்கொடுத்துவிட்டீர்களே என்று கேட்கிறார்கள். என்ன காசுக்காகவா விற்றோம். காசுக்காகவா வாங்கினோம். என்னண்ணே இப்படிப் போய் தொகுதிய கூட்டணி கட்சிக்கு விட்டுக்கொடுத்திட்டீங்களே என்று கடந்த மூன்று நாளாகத் தொல்லை தாங்க முடியவில்லை. போனை எடுக்க முடியல.  திண்டுக்கல் அ.தி.மு.க-வின் கோட்டை. இதை நீங்கள் விட்டுக்கொடுக்கலாமா. ஈசியாக ஜெயித்துவிட்டுப்போயிடலாமே என்கிறார்கள். கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவதற்கு தி.மு.க தயார் என்றால் நாமும் தயார். நாடாளுமன்றத் தேர்தலில் தனியாக நின்று முப்பத்தேழு இடங்களில் வெற்றி பெற்று அம்மா நிரூபித்துவிட்டார். ஆனால், இன்றைக்கு இருக்கிற சூழலில், சூழ்ச்சியால் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்று தெரிந்துதான் கூட்டணி அமைத்தோம். இப்போதும் நாம் தனித்து நிற்க முடியும். சமயோசித புத்தி எது என்று யோசித்தால் கூட்டணிதான் சிறந்தது என்று ஒட்டுமொத்த அ.தி.மு.க தலைமை முடிவு எடுத்துதான் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிடுகிறோம்’’ என்று கூட்டணி அமைத்தது குறித்து விளக்கமளித்தார்.

ராகுல் காந்தியை மோடியின் பேரன் எனச் சீனிவாசன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க