மூன்று நாள்களாக வெறிச்சோடிய குமரி தேர்தல் அலுவலகம் - இன்று வேட்புமனுத்தாக்கல் செய்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன் | Pon. Rathakrishnan to file Nomination today

வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (22/03/2019)

கடைசி தொடர்பு:10:15 (22/03/2019)

மூன்று நாள்களாக வெறிச்சோடிய குமரி தேர்தல் அலுவலகம் - இன்று வேட்புமனுத்தாக்கல் செய்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட கடந்த மூன்று நாள்களாக யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யாத நிலையில் இன்று பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார்.

பொன்.ராதாகிருஷ்ணன்


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தல் அலுவலகம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களாக ஒருவர்கூட வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் தேர்தல் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையில் பா.ஜ.க சார்பில் தமிழகத்தின் ஐந்து தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்துகொள்கின்றனர்.

பொன்.ராதாகிருஷ்ணன்

 

இதுகுறித்து, பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ``கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளித்ததற்காக பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர் அமித்ஷா, தமிழகத்தின் லட்சக்கணக்கான தாமரை சொந்தந்தங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 40 ஆண்டுகளாகப் பொதுவாழ்வில் உற்சாகம் அளிக்கும் குமரி மாவட்ட மக்களுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களின் கருத்தின் அடிப்படையில் 22.03.2019 (இன்று) மதியம் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.