``தேனியில் தினகரனின் உழைப்பு இருக்கிறது; வெற்றிபெறுவேன்’’ - தங்க தமிழ்ச்செல்வன் நம்பிக்கை | The work of DTV Dinakaran is in theni, says thanga thamilselvan

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (22/03/2019)

கடைசி தொடர்பு:09:40 (22/03/2019)

``தேனியில் தினகரனின் உழைப்பு இருக்கிறது; வெற்றிபெறுவேன்’’ - தங்க தமிழ்ச்செல்வன் நம்பிக்கை

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல், அவரை எதிர்த்து யார் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அந்த வகையில் இன்று அ.ம.மு.க தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

தங்க தமிழ்ச்செல்வன்


தேனி நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் நிறுத்தப்படும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், இன்று வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். இந்நிலையில் அவரை எதிர்த்து அ.ம.மு.க சார்பில் அக்கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளரும் ஆண்டிபட்டித் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ’வுமான தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக தங்க தமிழ்ச்செல்வனை போனில் தொடர்ப்புகொண்டு பேசியபோது, ``ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அறிவிப்பு வெளியானதிலிருந்து போன் மேல போன் வந்துகொண்டிருக்கிறது. நிர்வாகிகளிலிருந்து கட்சியின் அடிப்படைத் தொண்டன் வரை போன்செய்து வாழ்த்துகள் சொல்கிறார்கள். தேனித் தொகுதியில் டி.டி.வி.தினகரனின் உழைப்பு இருக்கிறது. இங்கே அவரைத் தெரியாதவர்கள் இல்லை. அதே போல பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்துக்காக எவ்வாறு உழைத்தார் என்பதை மக்கள் நன்கு அறிவர். அப்படிப்பட்ட நிலையில்தான் தன் மகனை நிறுத்துகிறார். நான் மக்களை நம்பி தேனித் தொகுதியில் நிற்கிறேன்’’ என்றார்.

ஒருபக்கம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், அவரை எதிர்த்து அ.ம.மு.க சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் எனத் தேனி நாடாளுமன்றத் தேர்தல் சுடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. நிச்சயம் வலுவான, தேனியில் செல்வாக்கு மிக்க ஒருவரைத்தான் அறிவிப்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பெரியகுளம் (தனி) இடைத்தேர்தலில், அத்தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ’வும், தகுதிநீக்கம் செய்யப்பட்டவருமான கதிர்காமு, அ.ம.மு.க சார்பில் நிறுத்தப்படுகிறார். அதே போல், ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் ஜெயக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.