`வரிசை கட்டி நின்ற பஸ்கள், 50 நிமிடம் பயணிகள் தவிப்பு! '‍- கனிமொழி பிரசாரத்தால் போக்குவரத்து நெரிசல் | Kanimozhi, who had a campaign on the traffic jams in Paramagudi

வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (22/03/2019)

கடைசி தொடர்பு:11:44 (22/03/2019)

`வரிசை கட்டி நின்ற பஸ்கள், 50 நிமிடம் பயணிகள் தவிப்பு! '‍- கனிமொழி பிரசாரத்தால் போக்குவரத்து நெரிசல்

பரபரப்புடன் காணப்படும் பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு தி.மு.க  பிரசார கூட்டத்துக்கு போலீஸார் அனுமதி வழங்கியதால் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே கனிமொழி உரையாற்றினார்.

சாயல்குடியில் பிரசாரம் செய்த கனிமொழி

தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து கனிமொழி எம்.பி பிரசாரம் செய்தார்.  ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் மாலை 6 மணிக்குத் தனது பிரசாரத்தை தொடங்கிய கனிமொழி, கமுதி, அபிராமம், பார்த்திபனூர் இறுதியாக  பரமக்குடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் சம்பத் குமார் மற்றும் நாடாளுமன்ற வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோரை ஆதரித்து பரமக்குடியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

``தி.மு.க தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி வென்று மத்திய அரசு அமையும்போது, ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். மேலும், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் முறையாகச் செயல்படுத்தப்பட்டு மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கப்படும். விவசாயிகள் நெசவாளர்கள் நலன் பாதுகாக்கப்படும். பெட்ரோல், டீசலுக்கு தினம்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை மாற்றி நிரந்த விலை நிர்ணயம் செய்யப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர் மானியமுறை மாற்றப்பட்டு அதன் விலை குறைக்கப்படும்.  ஜி.எஸ்.டி வரி குறைக்கப்படும். தமிழக ஏழை கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வு முறை ரத்து செய்யப்படும்'' என்றார்.

பரமக்குடியில் நெரிசலுக்கு மத்தியில் கனிமொழி பிரசாரம்

இந்தத் தேர்தல் பிரசாரத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் நவாஸ்கனி, பரமக்குடி சட்டசபை தொகுதி வேட்பாளர் சம்பத்குமார் மற்றும் ராமநாதபுரம்  மாவட்ட தி.மு.க செயலாளர் காதர் பாட்சா, முத்துராமலிங்கம் உட்படக் கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர். பரமக்குடியில் கனிமொழி பிரசாரம் செய்வதற்கு பரபரப்பும், நெரிசலும் மிகுந்த பேருந்து நிலையத்துக்கு எதிரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியை போலீஸார் ஒதுக்கி இருந்தனர். இரவு 9 மணிக்கு பரமக்குடிக்கு வந்த கனிமொழி பிரசாரத்தைத் தொடங்கிய நிலையில், அங்கு தி.மு.க கூட்டணிக் கட்சியினர் பெருமளவில் திரண்டிருந்தனர். இதனால் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய பேருந்துகள் வெளியேற முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. மதுரை -ராமநாதபுரம் சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஒரு வழியாக 9.50 மணிக்குக் கனிமொழி தனது பிரசாரத்தை முடித்த பின்னர் சகஜ நிலை திரும்பியது.