சாமியின் காலடியில் வேட்புமனு!- குலதெய்வம் கோயிலில் ஒன்றரை மணி நேரம் ஓ.பி.எஸ் மகன் வழிபாடு | OPS son pray to the god with nomination

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (22/03/2019)

கடைசி தொடர்பு:11:40 (22/03/2019)

சாமியின் காலடியில் வேட்புமனு!- குலதெய்வம் கோயிலில் ஒன்றரை மணி நேரம் ஓ.பி.எஸ் மகன் வழிபாடு

தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளரான ஓ.பி.எஸ். மகன் செண்பகத்தோப்பில் உள்ள குலதெய்வம் கோயிலில் வேட்புமனுவை வைத்து வழிபாடு நடத்தினார்.

தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்குமார் தேனி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தங்கள் குலதெய்வம் கோயிலான செண்பகத்தோப்பில் உள்ள வனப்பேச்சி அம்மனை வழிபடுவதற்காக இன்று காலை 6.45 மணியளவில் ஏராளமான கார்களுடன் கோயிலுக்கு வந்தார். அவரின் தந்தை ஓ.பி.எஸ் மற்றும் அவரின் குடும்பத்தினரோ வரவில்லை. குறிப்பிட்ட சிலர் மட்டுமே வந்திருந்தனர்.

குலதெய்வம் கோயிலில் ஓபிஎஸ் மகன்

அப்போது கோயிலில் ஏராளமான பூஜைகள் நடத்தப்பட்டன. கோயிலில் இருந்த சூலாயுதத்தில் எலுமிச்சை பழங்களை சொருகினார். தன் வெற்றிக்கு துணையாக இருக்க வேண்டுமென அங்கே இருந்த அனைத்து சாமிகளையும் அவர் வழிபட்டார். பின்னர் தான் கொண்டு வந்திருந்த வேட்புமனுவை சாமியின் காலடியில் வைத்து வழிபட்டார். சுமார் ஒன்றரை மணி நேர வழிபாட்டுக்குப் பின் அங்கேயிருந்து கிளம்பிய ரவீந்திரநாத்குமார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிலும் வழிபாடு நடத்தினார்.

பூசாரியிடம் வேட்புமனுவை கொடுத்து வழிபட்ட ஓபிஎஸ் மகன்

பின்னர் அவர் கூறும்போது, ``தேனி தொகுதியில் எனக்கு எதிராக யார் நின்றாலும் கவலையில்லை. தேர்தல் முடிவுகள் குறித்து தேர்தல் யுத்திகளும், மக்களுமே பதில் சொல்வார்கள்'' எனத் தெரிவித்தார்.