``பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படும் பெண்களுக்கு இலவச சட்ட உதவி அளிக்கிறோம்’’ - திலகவதி ஐ.பி.எஸ் | Thilakavathy IPS talks about her new initiative for sexual assault victims

வெளியிடப்பட்ட நேரம்: 12:28 (22/03/2019)

கடைசி தொடர்பு:12:54 (22/03/2019)

``பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படும் பெண்களுக்கு இலவச சட்ட உதவி அளிக்கிறோம்’’ - திலகவதி ஐ.பி.எஸ்

``எங்கள் குழுவில் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இலவச சட்ட உதவிகளைச் செய்வார்கள். இதனால் சட்ட விவரங்கள் பற்றித் தெரியாத பெண்கள் மற்ற இடங்களில் அலைய வேண்டியதில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து புகார் அளித்தால்தான் நீதி கிடைக்கும். அப்பிரச்னையிலிருந்தும் மீண்டு வந்து, சுதந்திரமாகச் செயல்பட முடியும்.’’

பொள்ளாச்சி சம்பவம் மற்றும் பாலியல் பிரச்னைகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில், `பாலியல் வன்முறைக்கு எதிரான முறையீட்டுக் குழு’ ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. திலகவதி ஐ.பி.எஸ், கல்வியாளர் உமா தேவி, வழக்கறிஞர்கள் சுதா ராமலிங்கம் மற்றும் ஆதிலட்சுமி, குட்சியா காந்தி ஐ.ஏ.எஸ், சமூக ஆர்வலர் ஓவியா உட்பட பலதுறைகளைச் சார்ந்தப் பெண்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவின் செயல்பாடுகள் பற்றிப் பேசுகிறார், இதன் ஒருங்கிணைப்பாளர் திலகவதி ஐ.பி.எஸ்.

திலகவதி ஐ.பி.எஸ்

``உங்கள் குழு எப்படி உருவானது?’’ 

``பொள்ளாச்சி சம்பவம் பெண்கள் மத்தியில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தச் சம்பவம் நடந்த பிறகு, பலதுறைகளைச் சார்ந்தப் பெண்களும் விவாதித்தோம். பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், இதுபோன்ற பாலியல் ரீதியான பிரச்னைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கும் உதவும் வகையில் ஒரு குழு ஏற்படுத்தலாம் என முடிவெடுத்தோம். அரசுப் பணியில் இருந்தவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட பலதுறைகளைச் சேர்ந்த 40 பெண்கள் எங்கள் குழுவில் இணைய முன்வந்தார்கள். இரு தினங்களுக்கு முன்பு நடந்த எங்கள் குழுவின் கூட்டத்தில் 28 பேர் கலந்துகொண்டார்கள். பெண்கள் பாதுகாப்புக்கான முயற்சிக்கு பலம் சேர்க்க, எந்தத் துறையைச் சார்ந்தப் பெண்களும் எங்கள் குழுவில் இணையலாம்.’’

திலகவதி ஐ.பி.எஸ்

``பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக எத்தகைய செயல்களைச் செய்ய இருக்கிறீர்கள்?’’

``பாலியல் தொடர்பான பிரச்னைகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முதலில் ஆறுதல் மற்றும் நம்பிக்கைத் தேவை. உளவியல் நிபுணர்கள், சமூக ஆர்வலர்களின் உதவியுடன், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முதலில் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கு உதவிகளைச் செய்வோம். பிறகு, அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்து, உரிய நீதி கிடைக்க வழிவகை செய்வோம். பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பில் நாங்களே காவல்துறையில் புகார் அளித்து, வழக்கறிஞர்கள் உதவியுடன் வழக்கை நடந்துவோம். நீதிமன்றத்தில் பலரின் மத்தியில் பாதிக்கப்பட்ட பெண்களை நீதிபதிகள் விசாரிக்கக் கூடாது என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், புகார் தெரிவிப்பது முதல் விசாரணை நடத்துவது வரை சட்டத்தின்படி பெண்கள் நடத்தப்படுவதில்லை. பாதிக்கப்பட்ட பெண்களிடம் நீதிபதிகள் தனிப்பட்ட முறையில் விசாரிக்க வழிவகை செய்வோம். எக்காரணம் கொண்டும் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த விவரங்கள் வெளியே தெரியாத வகையில் எல்லாச் செயல்பாடுகளும் மிக ரகசியமாக வைக்கப்படும். குற்றவாளிகளைச் சட்டத்தின் முன்னிறுத்தி, தண்டனை பெற்றுக்கொடுப்பதை உறுதி செய்வோம். இப்படித்தான் பாலியல் ரீதியான பிரச்னைகளை அணுக வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது. அதன்படி நியாயமாக நாங்கள் செயல்பட இருக்கிறோம்.

எங்கள் குழுவில் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இலவச சட்ட உதவிகளைச் செய்வார்கள். இதனால் சட்ட விவரங்கள் பற்றித் தெரியாத பெண்கள் மற்ற இடங்களில் அலைய வேண்டியதில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து புகார் அளித்தால்தான் நீதி கிடைக்கும். அப்பிரச்னையிலிருந்தும் மீண்டு வந்து, சுதந்திரமாகச் செயல்பட முடியும். எனவே, பயமின்றி, கூச்சமின்றி, நம்பிக்கையுடன் பெண்கள் துணிந்து வெளியே வர வேண்டும். அப்போதுதான் நம் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியும். அதற்குப் பெண்கள்தான் ஆதரவு கொடுக்க வேண்டும். பெண்கள் தவிர, சிறுவர், சிறுமியர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் உதவி செய்ய இருக்கிறோம். எங்கள் குழுவில் இணைந்து பணியாற்ற பல ஆண்கள் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், இப்போதைக்குப் பெண்கள் குழுவாகச் செயல்படவே விருப்பப்படுகிறோம்.’’

பொள்ளாச்சி சம்பவம்

``பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதைத் தாண்டி, இதுபோன்ற பிரச்னை ஏற்படாமல் இருக்க ஏதாவது வழிமுறைகளைச் செய்ய இருக்கிறீர்களா?’’

``நிச்சயமாகச் செய்ய இருக்கிறோம். பள்ளி, கல்லூரிகளில் பாலியல் பிரச்னைகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த இருக்கிறோம். இதுபோன்ற பாலியல் ரீதியான பிரச்னைகளில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது, பாதிக்கப்பட்டால் அப்பிரச்னையிலிருந்து மீண்டு வருவது எப்படி என்பதையும் விளக்கிக்கூற இருக்கிறோம். இதனால் இளைய தலைமுறையினர் விழிப்புடன் இருப்பார்கள்.’’

``இதுவரை புகார்கள் வந்திருக்கின்றனவா?’’

``பாதிக்கப்பட்டவர்கள் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ புகார் அளிக்கலாம். புகார் தெரிவிக்க ஒரு வாட்ஸ்அப் எண் அறிவித்திருக்கிறோம். இந்த அறிவிப்பை வெளியிட்டு இரு தினங்கள் ஆகிற நிலையில், இதுவரை எங்களுக்குப் புகார்கள் வந்திருக்கின்றன. அதற்குத் தீர்வு காணும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்.’’


டிரெண்டிங் @ விகடன்