` மூச்சைக் கொடுத்துக் காப்பாற்றினேன்!' - உயிருக்குப் போராடிய சிறுவனை மீட்ட போட்டோகிராபர் | Photographer Ravikumar Give First Aid to the Children Who Almost in Dead Condition

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (22/03/2019)

கடைசி தொடர்பு:15:27 (22/03/2019)

` மூச்சைக் கொடுத்துக் காப்பாற்றினேன்!' - உயிருக்குப் போராடிய சிறுவனை மீட்ட போட்டோகிராபர்

நேற்றைய தினம் நாடு முழுக்க ஹோலிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னையில் ஒவ்வொரு வருடமும் ஹோலி பண்டிகையின்போது சென்னையிலுள்ள புகைப்படக் கலைஞர்கள் பலரும் மக்களின் கொண்டாட்டத்தை புகைப்படமெடுக்க சௌகார்பேட்டையில் மறக்காமல் ஆஜராகி விடுவர். அப்படி நேற்றைய தினம் வேப்பேரியில் நடைபெற்ற  ஹோலி கொண்டாட்டத்தின்போதும் புகைப்படக் கலைஞர்கள் பலரும் புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தனர். அது ஒரு அப்பார்ட்மென்ட். அங்கு ஒரு சிறிய குளம் போன்ற இடத்தில் குழந்தைகள், பெரியவர்கள் எனப் பலரும் தண்ணீரில் விளையாடியபடி ஹோலி கொண்டாடிக் கொண்டிருந்தனர். போட்டோகிராபர் ரவிக்குமார் அங்கிருந்த சிறிய பிளாட்பார்மில் நின்று டாப் ஆங்கிளில் புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் 4 பேர் மயங்கி விழுந்துள்ளனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை தண்ணீருக்கு மேலே கொண்டு வந்தனர். ஒரு சிறுவனுக்கு மட்டும் மூச்சு நின்று போயிருந்தது. அவனுக்கு முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்றியுள்ளார் ரவிக்குமார்.  

இந்த சம்பவம் குறித்து ரவிக்குமாரிடம் பேசினோம். ``அந்தப்  பையனை  நான் நின்றிருந்த பிளாட்பார்முக்கு கொண்டு வந்தப்ப மூச்சே இல்ல. அவன் உடம்பு குளிர்ந்து கிடந்தது.  எனக்கு சி.பி.ஆர். முதலுதவி கொடுக்கத் தெரியும். ஆம்புலன்ஸ் வரசொல்லிட்டு, அந்தப் பையனோட மார்புக்கிடைல என் கையை வச்சு அழுத்தினேன். அந்தப் பையன் வாய் வழியா என்னோட மூச்சைக் கொடுத்தேன். ஒரு மூணு நிமிஷம் இதே மாதிரி பண்ணினதுக்கு அப்புறம் அந்தப் பையன் கண் முழிச்சான். உடனே சுத்தியிருந்த மத்த போட்டோகிராபர்ஸ்லாம் `கண் முழிச்சுப் பாக்குறான்'னு சந்தோஷத்துல கத்துனாங்க. அப்புறம் அந்தப் பையன் முழிச்சுப் பாத்து வாந்தி எடுத்தான். அவனை உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க அவங்க அப்பா, அம்மா. இன்னைக்கு நல்லபடியா ஸ்கூலுக்கு கிளம்பி போயிட்டாரு அந்தப் பையன்" என உற்சாகத்தோடு பேசி முடித்தார். ரவிக்குமார். ரவிக்குமாரின் இந்தச் செயல் அருகிலிருந்த புகைப்படக்காரர்களை நெகிழச் செய்தது