`உயிர் பிழைக்க 10 சதவிகிதம்தான் வாய்ப்பு!’- சிறுவனுக்கு மறுவாழ்வு தந்த அரசு மருத்துவர்கள் | Government doctors saved the boy from critical stage

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (22/03/2019)

கடைசி தொடர்பு:12:11 (23/03/2019)

`உயிர் பிழைக்க 10 சதவிகிதம்தான் வாய்ப்பு!’- சிறுவனுக்கு மறுவாழ்வு தந்த அரசு மருத்துவர்கள்

மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வடமாநில சிறுவன் உயிர்பிழைக்கச் 10 சதவிகிதம்தான் வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வேலூர் அரசு மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் அந்தச் சிறுவனுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள்.

மத்தியப் பிரதேச மாநிலம், போபால் பகுதியைச் சேர்ந்தவர் ஜெத்தேந்தர் பர்மன். இவரின் மகன் ராகுல் (5). சமீபத்தில், திருப்பூரில் தங்கி கூலி வேலை செய்வதற்காக போபாலில் இருந்து சிலருடன், தன்னுடைய குடும்பத்தையும் ஜெத்தேந்தர் ரயிலில் அழைத்துவந்தார். வேலூர் மாவட்டம், காட்பாடியை ரயில் கடந்தபோது, சிறுவன் ராகுலுக்கு திடீரென காய்ச்சலுடன் வலிப்பு ஏற்பட்டது. அடுத்த சில நொடிகளில் மூக்கில் ரத்தம் வழிந்ததால், சிறுவன் மயக்கமடைந்து, சுயநினைவை இழந்தான். 

ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார், சிறுவனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவனுக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அபாயக் கட்டத்தை எட்டியிருப்பதால் உயிர்பிழைப்பது கடினம். 10 சதவிகிதம் மட்டுமே காப்பாற்ற வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் ராகுல் அனுமதிக்கப்பட்டான். 

தாயுடன் சிறுவன் ராகுல்

மருத்துவமனை டீன் சாந்திமலர் மேற்பார்வையில், குழந்தைகள் நலத்துறைத் தலைவர் மருத்துவர் தேரணிராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், சிறுவனைத் தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்துவந்தனர். இந்த நிலையில், சிறுவன் ராகுல் குணமடைந்துள்ளான். இன்னும் சில நாள்கள், சிகிச்சை பெற்றபிறகு, சிறுவன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவான் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்துவருகின்றன.