`சன்னார் கலகம், தோள்சீலைப் போராட்டம்’ பாடங்களை நீக்கிய NCERT - கேரள அரசு கடும் கண்டனம் | NCERT decision to remove chapter on caste struggle draws criticism

வெளியிடப்பட்ட நேரம்: 14:26 (22/03/2019)

கடைசி தொடர்பு:14:26 (22/03/2019)

`சன்னார் கலகம், தோள்சீலைப் போராட்டம்’ பாடங்களை நீக்கிய NCERT - கேரள அரசு கடும் கண்டனம்

ஒன்பதாம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்திலிருந்து, சாதியக் கொடுமைகளுக்கெதிரான சன்னார் கலகத்தைக் குறித்த பாடங்களை நீக்கியுள்ளது மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் (என்.சி.இ. ஆர்.டி - NCERT ) 

 என் சி இ ஆர் டி(NCERT ) பாடத்திட்டம்

கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள், திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. சாதியக் கொடுமைகளால் மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகினர். பனையேறும் தொழிலைச் செய்து வந்த பனையேறி நாடார், நாயர், ஈழவர், புலையர் உட்பட 18 சமூகத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. சன்னார் கலகம், தோள்சீலைப் போராட்டம் எனப்படும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தைக் குறித்த பாடங்களை நீக்கியதற்காக கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது NCERT. இந்திய கிரிக்கெட் வரலாறு பற்றிய பாடமும், விவசாயிகளின் வாழ்நிலை பற்றிய பாடமும் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மேற்பார்வையில் இயங்கும் மறுமலர்ச்சி பாதுகாப்புக் குழு, பாடத்திட்ட நீக்கம் பற்றி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``ஆதிக்கம் செலுத்தி வந்த சமூகங்களிடமிருந்து விடுபடுவதற்காக நடந்த தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் போராட்டத்தை வரலாற்றிலிருந்து அழிக்கும் முயற்சி நடைபெறுகிறது. சமூகநீதிக்கு எதிராக வரலாற்றைத் திரிக்கும் சங் பரிவாரின் முயற்சிகளை எதிர்கொள்வோம்” எனத் தெரிவித்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க