``சி.பி.ஐ விசாரணைக்கு ஒத்துழைத்தேன்!’’ - அ.தி.மு.க எம்.பி அன்வர்ராஜா விளக்கம் | Anwar raja explains about CBI inquiry

வெளியிடப்பட்ட நேரம்: 14:33 (22/03/2019)

கடைசி தொடர்பு:14:33 (22/03/2019)

``சி.பி.ஐ விசாரணைக்கு ஒத்துழைத்தேன்!’’ - அ.தி.மு.க எம்.பி அன்வர்ராஜா விளக்கம்

வக்ஃபு வாரிய கல்லூரிகளில் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை மேற்கொண்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. 

வக்ஃபு வாரிய தலைவர் அன்வர்ராஜா வீடு
 

வக்பு வாரியத் தலைவராக அ.தி.மு.க-வின் ராமநாதபுரம் தொகுதி எம்.பி அன்வர்ராஜா கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். இந்நிலையில் வாரியத்துக்குச் சொந்தமான கல்லூரியில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி மதுரையைச் சேர்ந்த சர்தார் உசைன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த சில நாள்களாக சி.பி.ஐ அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள அன்வர்ராஜாவிடம் நேற்று காலை சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த விசாரணையின்போது சில ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று சென்னை மண்ணடியில் உள்ள வக்பு வாரிய அலுவலகத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அங்குள்ள ஊழியர்களிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வக்ஃபு வாரிய தலைவர் அன்வர்ராஜா

இது குறித்து வக்பு வாரியத் தலைவரும் எம்.பி-யுமான அன்வர்ராஜாவிடம் கேட்டபோது, `உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாகச் சில ஆவணங்கள் அடிப்படையில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்தனர். அவர்களது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன்’’ என்றார்.

பா.ஜா.க-வுக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் சிட்டிங் எம்.பி-யான அன்வர்ராஜா வருத்தத்தில் உள்ளார். இதனால் தேர்தல் பணிகளில் ஈடுபட ஆர்வம் இன்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சி.பி.ஐ விசாரணை என்ற நெருக்கடியின் மூலம் அன்வர்ராஜாவைத் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த பா.ஜ.க தரப்பில் திட்டமிடப்படுவதாக ராமநாதபுரம் அ.தி.மு.க-வினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.