``சேலம் சிறுமி வழக்கில் பல இடையூறுகள் ஏற்பட்டன!'' - அரசு வழக்கறிஞர் | "Salem's case caused a lot of trouble!" - Government Attorney

வெளியிடப்பட்ட நேரம்: 16:46 (22/03/2019)

கடைசி தொடர்பு:16:46 (22/03/2019)

``சேலம் சிறுமி வழக்கில் பல இடையூறுகள் ஏற்பட்டன!'' - அரசு வழக்கறிஞர்

குற்றவாளிகள் 5 பேருக்கும் தலா 47 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2 ஆயுள் தண்டனையும் 40,000 அபராதமும், அபராதம் கட்டாத பட்சத்தில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

``சேலம் சிறுமி வழக்கில் பல இடையூறுகள் ஏற்பட்டன!'' - அரசு வழக்கறிஞர்

சேலம் சிறுமி பாலியல் கூட்டு வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 5 பேருக்கும் தலா 47 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2 ஆயுள் தண்டனையும். 40,000 அபராதமும், அபராதம் கட்டாத பட்சத்தில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில், ``தீர்ப்பு தாமதமாக வந்திருந்தாலும் வரவேற்கக்கூடிய தீர்ப்பாக இருக்கிறது" என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சென்றாயம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் பரமசிவம், பழனியம்மாள் தம்பதியர். இவர்களின் மூத்த மகளை, கடந்த 2014 பிப்ரவரி 14-ம் தேதி இரவு அதே ஊரைச் சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க பா.ம.க முன்னாள் நிர்வாகி பூபதி, ஸ்னேக்பாபு என்கிற ஆனந்தபாபு, ஆனந்தன், பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் முழுவதையும், அப்போதே ஜூனியர் விகடனில் `உடம்பெல்லாம் பவுடர்... ரத்தம் சிந்திய கால்கள்' என்ற தலைப்பில் விரிவாக எழுதியிருந்தோம்.

சேலம் சிறுமி வழக்கு

இந்த வழக்கு 2014-லிருந்து சேலம் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி விஜயகுமாரி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் அரசுத் தரப்பு வழக்கறிஞராக தனசேகரனும், எதிர்த் தரப்பில் திரவியம் மற்றும் பொன்மதிவதனனும் வாதாடி வந்தார்கள். இவ்வழக்கில் கடந்த 19-ம் தேதி பா.ம.க முன்னாள் நிர்வாகி பூபதி, ஸ்னேக்பாபு என்கிற ஆனந்தபாபு, ஆனந்தன், பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகிய 5 பேரையும் குற்றவாளியாக அறிவித்து போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டு 21-ம் தேதிக்குத் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்றார்.

அதையடுத்து 21-ம் தேதி நீதிமன்ற வளாகத்தில் சமூகச் செயற்பாட்டாளர்கள், மாதர் சங்க அமைப்பினர் மற்றும் குற்றவாளிகளின் குடும்பத்தினர்கள் குவியத் தொடங்கினார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து யாரும் வரவில்லை. போலீஸ் பலப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் 5 பேரும் அழைத்து வரப்பட்டார்கள். சரியாக நீதிபதி விஜயகுமாரி மாலை 3:50 க்கு வந்தமர்ந்தார். பரபரப்பான சூழலில் நீதிபதி தீர்ப்பைப் படிக்கத் தொடங்கினார்.

அந்தத் தீர்ப்பின் விவரம்...

ஞானகெளரி1. 120B - கூட்டுச் சதி வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 5,000 ரூபாய் அபராதம், கட்டத் தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனை.
2. 450 - வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 5,000 ரூபாய் அபராதம், கட்டத் தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனை.
3. 363 - தந்தையிடமிருந்து சிறுமி கடத்தல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 5,000  ரூபாய் அபராதம், கட்டத் தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனை.
4. 366 - கட்டாயப்படுத்தி வன்புணர்ச்சி - 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 5,000 ரூபாய் அபராதம், கட்டத் தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனை.  
5. 302 - கொலை வழக்கு, ஆயுள் தண்டனை 5,000 ரூபாய் அபராதம்.
6. 404 - இறந்தவரின் உடைமையைக் கடத்தல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 5,000 அபராதம், கட்டத் தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனை.
7. 201 - தடயங்கள் அழித்தல், 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 5,000 அபராதம், கட்டத் தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனை.
8. போக்சோ 5 குற்றம், 6 தண்டனை வழக்கில் ஆயுள் தண்டனை.

தனசேகரன்

ஆக, குற்றவாளிகள் 5 பேருக்கும் தலா 47 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2 ஆயுள் தண்டனையும் 40,000 அபராதமும், அபராதம் கட்டாத பட்சத்தில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இத்தீர்ப்பைக் கேட்டு குற்றவாளிகளின் குடும்பத்தினர் கத்திக் கதறி அழுதார்கள். காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தைவிட்டு வெளியே அனுப்பினர். பிறகு, குற்றவாளிகளுக்கு அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு மருத்துவப் பரிசோதனை செய்து சிறைக்குக் கொண்டுசென்றார்கள்.

இதுகுறித்து நீதிமன்றம் வந்திருந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஞானசெளந்தரி, ``சிறுமி பாலியல் கூட்டு வன்கொடுமையால் மரணமடைந்த கொடூரத்தை அறிந்து மாதர் சங்கத்தின் சார்பாகப் பல போராட்டங்களை முன்னெடுத்ததோடு வழக்கிற்காகவும் உறுதியாக இருந்தோம். 5 ஆண்டுகள் கடந்த நிலையில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்பது வரவேற்கதக்கது. ஆனால், படிப்பறிவு இல்லாத வறுமையில் வாழ்ந்துகொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட அவளது குடும்பத்தினர் அச்சத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு முழுப் பாதுகாப்பு கொடுப்பதோடு அவர்களின் வாழ்வு மேம்பட நிதி உதவியும் வழங்க வேண்டும்'' என்றார்.

இதுபற்றி அரசு வழக்கறிஞர் தனசேகரனிடம் கேட்டதற்கு, ``பல இடையூறுகளுக்குப் பிறகு 2016-ல் இந்த வழக்கை நான் எடுத்தேன். ஏழைச் சிறுமி பாலியல் வன்புணர்ச்சி ஆளாகி படுகொலை செய்யப்பட்டிருந்ததால் இவ்வழக்கை நான் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி வாதாடி வந்தேன். எனக்கு அரசுத் தரப்பிலும், காவல் துறை தரப்பிலும் ஒத்துழைப்பு இருந்தது. அதையடுத்து இவ்வழக்கைச் சிறப்பாக நடத்தினோம். தீர்ப்பு தாமதமாக வந்திருந்தாலும் வரவேற்கக்கூடிய தீர்ப்பாக இருக்கிறது. இந்தத் தீர்ப்பு, சமுதாயத்தில் பெண்கள் மீதான வக்கிர எண்ணம் கொண்டவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்