அன்வர் ராஜா எம்.பி-க்கு சிக்கலை ஏற்படுத்துமா வக்பு வாரிய சி.பி.ஐ சோதனை? | Is wakf board CBI raids create problem for Anwar raja?

வெளியிடப்பட்ட நேரம்: 15:04 (22/03/2019)

கடைசி தொடர்பு:15:04 (22/03/2019)

அன்வர் ராஜா எம்.பி-க்கு சிக்கலை ஏற்படுத்துமா வக்பு வாரிய சி.பி.ஐ சோதனை?

மதுரை வக்பு வாரிய கல்லூரியில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சென்னையில் உள்ள வக்பு வாரிய அலுவலகத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சோதனையால் அன்வர் ராஜாவுக்கு சிக்கல் ஏற்படுத்த அவரின் எதிர்கோஷ்டியினர் திட்டமிட்டுள்ளனர்.

அன்வர் ராஜா

சென்னை மண்ணடி ராஜாஜி சாலையில் தமிழ்நாடு வக்பு வாரிய அலுவலகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் மதுரையில் வக்பு வாரிய கல்லூரி செயல்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு கல்லூரியில் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் லஞ்சம் பெற்றதாகத் தகவல் வெளியானது. தொடர்ந்து இந்த ஆண்டும் உதவிப் பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் நியமனம் நடந்தது. அதிலும் லஞ்சம் பெறப்பட்டதாகக்கூறி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் லஞ்சப் பணம் பலருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். 

தற்போது வக்பு வாரியத்தின் தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த அன்வர் ராஜா எம்.பி. உள்ளார். இதனால் அன்வர் ராஜாவின் ராமநாதபுரம் வீட்டிலும் அலுவலகத்திலும் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து சென்னையில் வக்பு வாரிய அலுவலகத்துக்கு சி.பி.ஐ அதிகாரிகள் இன்று காலை வந்தனர். வக்பு வாரிய ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்தச் சோதனையில் சில முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சோதனை நடந்தபோது வக்பு வாரியத் தலைவரும் எம்.பியுமான அன்வர்ராஜா அங்கு இருந்தார். அவரிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்தச் சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 வக்பு வாரியம்

இதுகுறித்து சி.பி.ஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் ``நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்தச் சோதனை நடந்துவருகிறது. மதுரையில் உள்ள வக்பு வாரியக் கல்லூரியில் நடந்த நியமன முறைகேடு குறித்து விசாரித்துவருகிறோம். இந்த முறைகேட்டில் சிலருக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதனால்தான் சோதனை நடந்துவருகிறது. இதற்கிடையில் வக்பு வாரியத்தின் உறுப்பினர் ஒருவர் எங்களுக்குச் சில முக்கிய ஆவணங்களைக் கொடுத்துள்ளார். இதனால் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகளை ஆதாரத்துடன் வெளியில் கொண்டு வர நடவடிக்கை எடுத்துவருகிறோம். நியமனத்தில் யார், யாருக்கெல்லாம் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற விவரம் விரைவில் வெளியிடப்படும்" என்றார். 

 ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட இந்தமுறையும் அன்வர் ராஜா எம்.பி. விருப்ப மனுத்தாக்கல் செய்தார். அவரிடம் துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் நேர்காணல் நடத்தினர். ஆனால், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி இந்தமுறை அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க-வின் கோஷ்டிப் பூசலே காரணம் என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள். ராமநாதபுரத்தில் சிட்டிங் எம்.பியான அன்வர் ராஜாவுக்கு சீட் கிடைக்காத சூழலில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியிருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் அன்வர்ராஜாவுக்கு சீட் கொடுக்கப்படவில்லை என அவரின் எதிரணியினர் தகவல் தெரிவித்துவருகின்றனர். அதே நேரத்தில் ராஜ்ய சபா எம்.பி சீட்டைப் பெற அன்வர் ராஜா காயை நகர்த்திவருவதாக அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். 

சோதனை குறித்து கேட்க அன்வர் ராஜா எம்.பியை தொடர்புகொண்டபோது, ` உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக சில ஆவணங்கள் அடிப்படையில்  சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்தனர். அவர்களது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன்'' என்றார்.

தேர்தல் சமயத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் ஊழல் முறைகேடு தொடர்பாக நடந்த சி.பி.ஐ சோதனை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. சி.பி.ஐ சோதனையை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.