`இழப்பீடு உடனே வழங்கணும்!'- வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றித் தேர்தலைப் புறக்கணிக்கும் கிராமம் | Ariyalur Village people to boycott elections over various demands

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (22/03/2019)

கடைசி தொடர்பு:15:20 (22/03/2019)

`இழப்பீடு உடனே வழங்கணும்!'- வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றித் தேர்தலைப் புறக்கணிக்கும் கிராமம்

``எங்களுடைய பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கிறது. பழுப்பு நிலக்கரி திட்டத்துக்குச் சிறப்பு நீதிமன்றம் சொன்ன இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்குங்கள். இல்லையென்றால் பட்டாவைத் திருப்பிக் கொடுங்கள்" எனத் தமிழக அரசைக் கண்டித்து மேலூர் கிராம மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டியதோடு தேர்தல் புறக்கணிப்பு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடத்தி வருகின்றனர்.

                                           மேலூர் கிராமம்

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காகக் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு மேலூர், புதுச்சாவடி, ஜெயங்கொண்டம், தேவனூர் உள்ளிட்ட 13 கிராமங்களிலிருந்து விவசாயிகளுக்குச் சொந்தமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது, ஏக்கருக்கு 5,000 முதல் 25,000 வரை குறைந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

                                           இழப்பீடு கேட்டு வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றிய கிராம மக்கள்

இழப்பீடு தொகை போதுமானதாக இல்லை என ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதற்காக ஜெயங்கொண்டத்தில் இரண்டு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையில் ஏக்கர் ஒன்றுக்குக் குறைந்தது மரங்களைச் சேர்த்து ரூ.13,00,000 வழங்க வேண்டும் எனச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 

                                             வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றிய கிராம மக்கள்

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக நிலம் கொடுத்த மேலூர் உள்ளிட்ட 13 கிராம மக்களுக்கு என தனித்தனியே கருத்துக் கேட்புக் கூட்டம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. அப்போது, ``நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு அந்ததந்த கிராம சந்தை மதிப்பைக் கணக்கில் கொண்டு இரண்டு மடங்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மேலூர் மக்களுக்கு ரூ.5,40,000 வழங்கப்படும்" எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட  இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

                                       கறுப்புக்கொடியுடன் கிராம மக்கள்

இந்த நிலையில், தங்களுக்குத் தனி நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையை வழங்க வேண்டும் எனவும் இல்லை என்றால் உடனே தங்களுடைய பட்டாவைத் திரும்ப வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து மேலூர் கிராம மக்கள் மட்டும் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.