`எங்கள் வேட்பாளர் மக்களுக்கு நல்லதே செய்வார்!- செல்லூர் ராஜு | ADMK will win in Madurai says Minister Sellur Raju

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (22/03/2019)

கடைசி தொடர்பு:17:00 (22/03/2019)

`எங்கள் வேட்பாளர் மக்களுக்கு நல்லதே செய்வார்!- செல்லூர் ராஜு

``மதுரை வளர்ச்சியடையும் படியாகச் செயல்படுவேன். அதை மக்களிடம் பிரசாரம் செய்து வாக்கு கேட்பேன்'' என மதுரை அ.தி.மு.க வேட்பாளர் தெரிவித்தார்.

செல்லூர் ராஜூ

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட நாமினேஷன் தாக்கல் செய்துவருகின்றனர். மதுரையைப் பொறுத்தவரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், அ.தி.மு.க., வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்தியன், அ.ம.மு.க வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அ.தி.மு.க-வின் தேர்தல் அலுவலகத்தை மதுரை கே.புதூரில் அமைச்சர்  செல்லூர் ராஜு திறந்து வைத்தார். இதில் அ.தி.மு.க வேட்பாளர் ராஜ் சத்தியன், எம்.எல்.ஏ வி.வி.ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், சரவணன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகளும் இதில் கலந்துகொண்டனர்.

அதைத் தொடர்ந்து செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில்,``மதுரை நாடாளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ் சத்யன் வெற்றி பெற்று மக்களுக்கு நல்லதே செய்வார்’’ என்றார்.

வேட்பாளர் ராஜ் சத்யன் கூறுகையில், ``மக்கள்  இரட்டை இலைக்கு அளிக்கும் வாக்கினை இரட்டை இலைக்கு மட்டுமே எப்போதும் போல அளிப்பார்கள். அதிலிருந்து மாறமாட்டார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனையை விளக்கி வாக்கு சேகரிப்போம். சென்னைக்கு நிகரான வளர்ச்சியைக் கொண்டுவரவேண்டும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவேண்டும், மதுரை வளர்ச்சியடைய வேண்டும். இதை முக்கியமாக கொண்டு எனது பிரசாரம் அமையும்'' என்றார்.

அமைச்சர்

மதுரை வேட்பாளர் ராஜ் சத்தியன் நிகழ்ச்சியினை மதுரை எம்.பி., கோபால கிருஷ்ணன் புறக்கணித்து வருவதாக அ.தி.மு.க, தொண்டர்கள் தெரிவித்தனர். `தனக்கு சீட் வழங்கவில்லை எனத் தேர்தல் பணிகளை அவர் செய்வதில்லை' எனவும் தெரிவித்தனர்.