`எந்தப் பொறுப்பிலும் இல்லை; ஆனா சீட் கொடுத்தாங்க!'- அசத்தும் நாம் தமிழர் நீலகிரி பெண் வேட்பாளர் | Nam Thamizhar katchi Nirgris candidate Manimegalai files nomination today

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (22/03/2019)

கடைசி தொடர்பு:16:40 (22/03/2019)

`எந்தப் பொறுப்பிலும் இல்லை; ஆனா சீட் கொடுத்தாங்க!'- அசத்தும் நாம் தமிழர் நீலகிரி பெண் வேட்பாளர்

`இனியும் தாமதியோம்; இழிநிலையில் வாழோம்' என்ற உறுதி மொழியேற்று, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நீலகிரி தொகுதியில் வேட்புமனு தாக்கல்செய்தார்.

நாம் தமிழர் வேட்பாளர் சித்ரா

நாம் தமிழர் கட்சி சார்பில், நீலகிரி (தனி) தொகுதியில் போட்டியிட ஊட்டி நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்த இளங்கலை பொறியியல் பட்டதாரி சே.மணிமேகலை அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பு மனு தாக்கல்செய்ய தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பில் சே.மணிமேகலை சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து, `இனியும் தாமதியோம்; இழிநிலையில் வாழோம்' என்ற உறுதி மொழி ஏற்று ,கலெக்டர் அலுவலகத்தில்  வேட்பு மனு தாக்கல்செய்தார்.

நாம் தமிழர் வேட்பாளர் சித்ரா வேட்பு மனு தாக்கல் செய்தார்

இதுகுறித்து சே.மணிமேகலை கூறுகையில், 'நாம் தமிழர் கட்சியில் மகளிர் பாசறையில் இருந்தேன். கட்சியில் பொறுப்பு வகிக்கவில்லை.  40 தொகுதிகளில், எங்கள் கட்சியில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தமிழகம் மற்றும்   புதுவையில் 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். விருப்ப மனு அளிக்கும் வழக்கம் எங்கள் கட்சியில் இல்லை. இளங்கலை பொறியியல் பட்டதாரியான சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்த என்னை நீலகிரி தொகுதிக்கு கட்சித் தலைமை  வேட்பாளராகத் தேர்வுசெய்தது. தொண்டர்கள் ஆதரவுடன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். நீலகிரியில் இயற்கை விவசாயத்தை முன்னெடுப்பது, ஏரிகளைப் புனரமைப்பது, நெகிழிகளை ஒழிப்பது போன்ற தலையாய பிரச்னைகளை முன்வைத்து வாக்கு சேகரிப்போம்" என்றார்.