`எங்ககிட்ட மட்டும் வீரத்தைக் காட்டுங்க!' - பறக்கும்படை அதிகாரிகளிடம் சீறிய வியாபாரிகள் | Merchants oppose EC's action

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (22/03/2019)

கடைசி தொடர்பு:17:20 (22/03/2019)

`எங்ககிட்ட மட்டும் வீரத்தைக் காட்டுங்க!' - பறக்கும்படை அதிகாரிகளிடம் சீறிய வியாபாரிகள்

உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.68 லட்சம் மதிப்புள்ள 142 கிலோ வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ள நிலையில், ``கோடிகோடியாகக் கொண்டு செல்லும் பணத்தைப் பிடிக்காமல் எங்களிடம் வீரத்தைக் காட்டுவது எந்த விதத்தில் நியாயம்" என்று வியாபாரிகள் கொந்தளித்தனர்.

                                         பறிமுதல் செய்யப்பட்ட கார்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள நாச்சியார் பேட்டையில் தேர்தல் கண்காணிப்பு குழுத் தலைவர் இலரா தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சியிலிருந்து ஜெயங்கொண்டம் நோக்கிச் சென்ற முருகன் என்பவருக்குச் சொந்தமான காரை மறித்து சோதனை செய்தனர். அதில் ஐந்து பைகளில் வெள்ளி நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து அரியலூர் கோட்டாட்சியர் சத்யநாராயணனிடம் ஒப்படைத்தனர்

                                       வியாபாரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி பொருள்கள்

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிப் பொருள்கள் சீல் செய்யப்பட்டு அரியலூர் கருவூலத்தில் படைக்கப்பட்டது. 68 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                        வெள்ளிப் பொருள்கள்

``வாக்காளார்களுக்குப் பணம் கொடுப்பதற்காக கோடி கோடியாக அரசியல் கட்சியினர் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு சிறு, குறு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் தேர்தல் பறக்கும் படையினர் வீரத்தைக் காட்டுவது எந்த விதத்தில் நியாயம்" என்று கொந்தளிக்கின்றனர் வியாபாரிகள்.