கட்சி விழாவிற்குப் பந்தல் போட்டவருக்கு வாய்ப்பு! - ஓ.பி.எஸ் காலில் விழுந்த பெரியகுளம் வேட்பாளர் | ADMK changes Periyakulam assembly election candidate

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (22/03/2019)

கடைசி தொடர்பு:18:50 (22/03/2019)

கட்சி விழாவிற்குப் பந்தல் போட்டவருக்கு வாய்ப்பு! - ஓ.பி.எஸ் காலில் விழுந்த பெரியகுளம் வேட்பாளர்

வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிமனை கால்கோல் நடும் விழா தேனி ஏ.பி.எம் ஹோட்டல் எதிர்புறம் நடைபெற்றது. காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்நிகழ்வில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், உசிலம்பட்டி எம்.எல்.ஏ நீதிபதி, சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம், அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தார் டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த முருகன். இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது தொடர்பாக கட்சிக்குள் நிர்வாகிகளிடையே அதிருப்தி ஏற்பட்டிருந்தது. இதை, பெரியகுளம் வேட்பாளரை அ.தி.மு.க மாற்ற இருக்கிறது எனச் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், பணிமனை கால்கோல் விழா நடந்துகொண்டிருக்கும் போதே, பெரியகுளம் வேட்பாளராக மயில்வேல் என்பவர் அறிவிக்கப்பட்டார். அவர், கட்சி விழாவிற்குப் பந்தல் போடும் தொழில் செய்துவருபவர், தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்தவர்.

நடந்துகொண்டிருந்த விழாவிற்குப் பந்தல் போட்டதும் அவரே. அங்கு ஓரமாக நின்றிருந்த `பந்தல்’ மயில்வேலிடம், கட்சித் தலைமையிடமிருந்து வெளியான அறிவிப்பு குறித்து கூற, அதிர்ச்சியடைந்த மயில்வேல், அங்கிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் காலில் விழுந்தார். கட்சி நிர்வாகிகள், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் அனைவரும் அவரை வாழ்த்தினர். ``சாதாரண அடிப்படைத் தொண்டன் நான். எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி” என்றார் மயில்வேல். இந்நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.