`சேலத்தில் ஜெயித்தே ஆக வேண்டும்!' - கறார் காட்டிய எடப்பாடி பழனிசாமி | we should won in salem loksabha constituency Edappadi K. Palaniswami

வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (22/03/2019)

கடைசி தொடர்பு:17:47 (22/03/2019)

`சேலத்தில் ஜெயித்தே ஆக வேண்டும்!' - கறார் காட்டிய எடப்பாடி பழனிசாமி

`ஸ்கெட்ச் 18 தொகுதி இடைத்தேர்தலுக்காக இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலில் தன் தொகுதியான சேலம் மாவட்டத்தில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற உறுதியோடு இருக்கிறார் எடப்பாடி' என்கிறார்கள் அ,தி.மு.கவட்டாரத்தில்.

 

எடப்பாடி பழனிசாமி


நாடாளுமன்றத் தேர்தல் களைகட்ட ஆரம்பித்துள்ளது. தேர்தல் பிரசாரங்களும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. `உங்களுக்குத் தேவையான பணம் சரியான நேரத்தில் வரும். நீங்க சரியா வேலை செஞ்சா போதும். பணத்தை இடையில இருக்குற யாரும் சுருட்டிறக்கூடாது' என நடந்துமுடிந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இதை ஏற்ற மாவட்டச் செயலாளர்கள் தைரியத்துடன் ஊர் திரும்பினர். தொடர்ந்து குறிப்பிட்ட தொகை மட்டுமே கட்சியிலிருந்து கொடுக்கப்படும் மீதி, அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் செலவழிக்கவேண்டும் என்று புதிய நிபந்தனையை தலைமை விதித்துள்ளது. இதனால் ஆடிப்போயுள்ளனர் அமைச்சர்கள். ஆனால் அமைச்சர்கள் தரப்பிலோ, செலவு செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர்.

சரவணன்

இதனால் மாவட்டங்களில் தேர்தல் பணிகளில் சுணக்கம் நிலவி வருகிறது. ஆனால், சேலம் மாவட்டத்துக்கு மட்டும் பணத்தை வாரி இறைக்க தயாராகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. சொந்தத் தொகுதி என்பதால் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். `ஸ்கெட்ச் 18 தொகுதி இடைத்தேர்தலுக்காக இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலில் தன் தொகுதியான சேலம் மாவட்டத்தில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற உறுதியோடு இருக்கிறார் எடப்பாடி' என்கிறார்கள் அ,தி.மு.க வட்டாரத்தில். இது குறித்து அவர்கள் பேசுகையில், ``சேலம் தன் சொந்தத் தொகுதி என்பதால் அங்கு ஜெயித்தே ஆகவேண்டும் எனக் கருதுகிறார் எடப்பாடி. தேர்தல் தொடர்பாக நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், `சேலத்துல வன்னியர் வேட்பாளர நிறுத்துனதுக்கு முக்கிய காரணம், அங்க பா.ம.க வேலை செய்வாங்கணு உறுதி கொடுத்ததாலதான். அதுவேற இல்லாம, சேலம் அவங்களோட பெல்ட்டு, பேசி முடிவுபண்ணிதான் கே.ஆர்.எஸ்.சரவணன அங்க நிறுத்துனோம். சேலம் என் மானப்பிரச்னை. அங்க கோட்டவிட்டா பெரிய அவமானமாயிடும்' என்று பொருமியிருக்கார்.

பார்த்திபன்

அதேபோல தே.மு.தி.க காரங்களும், வேலை செய்வாங்கனு முதல்வர் நம்புகிறார்'' என்று விவரித்தவர், `காரணம், தி.மு.கவில் சேலம் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும், எஸ்.ஆர்.பார்த்திபன் தே.மு.தி.கவிலிருந்து பிரிந்துவந்தவர். அவர் மீது தலைமைக்கு இருக்கும் கோபத்தை வெளிப்படுத்த இதுதான் சமயம். பார்த்திபனை வெற்றிபெறச் செய்யக்கூடாது என்பதில் தே.மு.தி.கவினர் கவனமாக உள்ளனர். இது தொடர்பாக எடப்பாடியும் பிரேம லதாவுடன் பேசியுள்ளார். சேலத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் மூன்று வேட்பாளர்களும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான். இதனால் வாக்குகள் பெருமளவில் பிரியக்கூடும். இருப்பினும், பெரும்பாலான வாக்குகளை தங்கள் பக்கம் ஈர்க்கப் பார்க்கிறார் எடப்பாடி'' என்கின்றனர். 2016-ம் ஆண்டு சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில், நிற்கவைக்கப்பட்ட கே.எஸ்.ஆர் சரவணன் 9873 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரனிடம் தோல்வியைத் தழுவினார். மீண்டும் அவரை மக்களவைத் தொகுதியில் நிற்கவைத்திருப்பதால், வெற்றியை எளிதில் நெருங்கிவிடலாம் என நினைக்கின்றனர் தி.மு.கவினர்.