இரவில் ரத்துசெய்யப்பட்ட புறநகர் ரயில்கள்! - எழும்பூர்- தாம்பரம் பயணிகள் தவிப்பு | Emu electric train train timings

வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (22/03/2019)

கடைசி தொடர்பு:18:06 (22/03/2019)

இரவில் ரத்துசெய்யப்பட்ட புறநகர் ரயில்கள்! - எழும்பூர்- தாம்பரம் பயணிகள் தவிப்பு

தமிழகத்தின் தலைநகரம் மெட்ரோ, பறக்கும் ரயில் என நவீன மயமானாலும், இன்றும் செங்கல்பட்டு முதல் அரக்கோணம் வரை செல்ல மக்கள் நம்பியிருப்பது மின்சார ரயில் வண்டிகளைத்தான். இந்நிலையில், தென்னக ரயில்வே திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி பல மின்தொடர் வண்டிகளை ரத்துசெய்துள்ளது.

சென்னையின் பல இடங்களை மின்தொடர் வண்டிகளே இணைத்துவருகின்றன. காலை வரை இயல்பாக இயங்கிக்கொண்டிருந்த ரயில் வண்டிகள், திடீரென ரயில்வே ரத்துசெய்துள்ளது. இதுகுறித்து சரியான முன்னறிவிப்பு ஏதுமில்லை.


ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மிக அருகில் இருக்கிறது சென்னை கோட்டை ரயில் நிலையம். ரயில்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து சரியான முன்னறிவிப்பு இல்லாத காரணத்தால், நோயாளிகள் செய்வதறியாது நிற்கின்றனர்.

"வாராவாரம் ரயில்ல வந்து, ஆஸ்பத்திரில மாத்திரைகள் வாங்கிட்டுப் போவேன். எனக்கு 70 வயசு ஆகுது. தனியாகத்தான் வருவேன். காலையில் ரயில்லதான் வந்தேன். எந்த அறிவிப்பும் வர்ல. டிவி-லையும் சொல்லல. என்ன பண்ணப் போறேன்னு தெரில" என்றார் மூர்த்தி.

தென்னக ரயில்வே, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வைத்துள்ள அறிவிப்புப் பலகையின்படி, 21-3-2019 முதல் 5-4 -2019 வரை இந்த நிலை தொடரும். அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

வண்டி எண்கள் 40135,40145,40153,40155,40157 ஆகியவை 5-4-2019 வரை ரத்துசெய்யப்பட்டுள்ளன.

மேலும் ,சென்னை கடற்கரைக்குச் செல்லும் மின்தொடர் வண்டிகள், பூங்கா ரயில் நிலையம் வரையே செல்லும் என கூறப்பட்டுள்ளது.

பராமரிப்புப்‌ பணிகள் அவசியம்தான். ஆனால், ரயிலை நம்பி பல்லாயிரக்கணக்கானோர் தினம்தினம் இருக்கின்றனர் என்பதை உணர்ந்து, சரியான முன்னறிவிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.