`என்னை ஈர்த்த அந்தத் திட்டம்!'‍- அ.தி.மு.க-வில் இணைந்த காரணத்தைச் சொல்லும் சுப்புராஜ் | I'm more inspired this ADMK party says Subburaj!

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (22/03/2019)

கடைசி தொடர்பு:20:13 (22/03/2019)

`என்னை ஈர்த்த அந்தத் திட்டம்!'‍- அ.தி.மு.க-வில் இணைந்த காரணத்தைச் சொல்லும் சுப்புராஜ்

சுப்புராஜ்

``எனக்கு வாரிசு அரசியலில் உடன்பாடில்லை. அதனால்தான் முக்கியமாக அ.தி.மு.க-வில் இணைந்தேன்'' என்கிறார் காமெடி நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ். தற்போது தேர்தல்களம் சூடுபிடித்து வரும் நிலையில், மற்ற கட்சிகளைப் போலவே அ.தி.மு.க-வில் சில பிரபல நடிகர்கள் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 16-ம் தேதி சுப்புராஜூம் இணைந்துள்ளார். அவருக்கு தலைமைக் கழகப் பேச்சாளர் பொறுப்பும் தரப்பட்டுள்ளது. 

அது குறித்து பேசுபவர், ``நாற்பது வருஷத்துக்கும் மேல் ஆகுது. எவ்வளவோ அரசியல் கூட்டத்தைப் பார்த்துவிட்டேன். எத்தனையோ மேடைகளில் பேசியிருக்கிறேன். தே.மு.தி.க-விலிருந்து விலகிய பிறகு வேறு எந்தக் கட்சியிலும் இணைய எனக்கு விருப்பமில்லாமல் இருந்தது. சமீபத்தில் நான் பார்த்து வியந்தது அ.தி.மு.க நிர்வாகத்தைத்தான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவருடைய திட்டங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி வருகிறார் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி. பருவநிலை மாற்றத்தால் மழை பொய்த்து வருவதோடு, வறட்சியும் இருப்பதால் பல கிராமங்கள் வறுமையில் தாண்டவமாடுகின்றன. தினக்கூலிக்குச் சென்று சம்பாதிக்கும் பணம் எந்த அளவுக்குப் போதுமானதாக இருக்கும் என்பது தெரியவில்லை. 

சுப்புராஜ்

நான் கிராமத்தில் பிறந்தவன்தான். அதனால் அங்கு நடக்கும் அவலத்தைப் பற்றி நன்கு அறிவேன். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதேபோல ஏழைகளுக்கு மாதம் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் வழங்கவும் திட்டமிட்டிருக்கிறார். இப்படி எத்தனையோ ஏழைகளுக்காக, அவர்களின் வாழ்க்கைக்காக சில நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியும் வருகிறார்'' என்றவரிடம் அ.தி.மு.க மீது அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கிறார்களே என்று கேட்டதற்கு, 

``எப்படிப்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்தாலும், எதாவது ஒரு குறை சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். அதற்கு அஞ்சினால் எந்த ஆட்சியையும் நடத்த முடியாது. அதேபோல, இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க வாரிசு அரசியலைச் செய்கிறது. ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி எனத் தொடர்ந்து வாரிசு அரசியலில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால், அந்தக் கட்சியில் நீண்ட காலமாக ஆரம்பத்தில் என்ன பொறுப்பில் இருந்தார்களோ அதே பொறுப்பில்தான் இப்போதுவரை இருக்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. அதனால்தான் அ.தி.மு.க-வில் இணைந்தேன். தொடர்ந்து பல நல்ல விஷயங்களை இந்தக் கழகத்துடன் இணைந்து செய்ய வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதனால்தான் அ.தி.மு.க என்னைத் தலைமை கழகப் பேச்சாளராக அறிவித்திருக்கிறார்கள்'' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க