`அ.தி.மு.க-வை யாரும் நெருங்கக்கூட முடியாது!' - வேட்புமனு செய்த ஓ.பி.எஸ் மகன் பேட்டி | OPS's son Ravindranathkumar, presenting the nomination today.

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (22/03/2019)

கடைசி தொடர்பு:20:00 (22/03/2019)

`அ.தி.மு.க-வை யாரும் நெருங்கக்கூட முடியாது!' - வேட்புமனு செய்த ஓ.பி.எஸ் மகன் பேட்டி

ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமார், இன்று வேட்புமனு தாக்கல்!

தேனி நாடாளுமன்ற அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், இன்று வேட்புமனு தாக்கல்செய்தார்.

ரவீந்திரநாத்குமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோட்டத்தில் அமைந்திருக்கும் வனப்பேச்சியம்மன் கோயில், ஓ.பன்னீர்செல்வத்தின் குலதெய்வ கோயில். இன்று காலை, பெரியகுளத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற ரவீந்திரநாத்குமார், தனது குலதெய்வமான வனப்பேச்சியம்மனை வழிபட்டுவிட்டு நேராகத் தேனி வந்தார். தேனி பங்களாமேட்டில் இருந்து கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், கட்சிக்காரர்கள் புடைசூழ, தேனி கலெக்டர் அலுவலகம் அழைத்துவரப்பட்டார். உடன், ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சரும் தேனி நாடாளுமன்றத் தேர்தல் அ.தி.மு.க பொறுப்பாளருமான ஆர்.பி.உதயகுமார், மாவட்டச் செயலாளர் சையதுகான், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ரவீந்திரநாத்குமார்

மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்த அனைவரும், 100 மீட்டருக்கு அப்பால் தடுத்து நிறுத்தப்பட்டனர். கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், ரவியை அழைத்துக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்ய கலெக்டர் அலுவலகத்திற்குள் வந்தார். மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம், தேனி தொகுதி நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட தனது மனுவைத் தாக்கல்செய்தார். அப்போது, தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அ.ம.மு.க வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ரவீந்திரநாத்குமார், “அ.தி.மு.க-வை மற்ற எந்த இயக்கங்களும் நெருங்கக்கூட முடியாது” என்றார். அ.தி.மு.க பெரியகுளம் வேட்பாளர் மயில்வேல் மற்றும் ஆண்டிபட்டி அ.தி.மு.க வேட்பாளர் லோகிராஜன், அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல்செய்தனர்.