`வெற்று வார்த்தையைக் கேட்டுக் கேட்டு சலிச்சுப்போச்சு!'- அ.தி.மு.க வேட்பாளருக்கு எதிராகச் சீறும் மக்கள் | people coming against the AIADMK candidate

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (22/03/2019)

கடைசி தொடர்பு:20:48 (22/03/2019)

`வெற்று வார்த்தையைக் கேட்டுக் கேட்டு சலிச்சுப்போச்சு!'- அ.தி.மு.க வேட்பாளருக்கு எதிராகச் சீறும் மக்கள்

"நான் வெற்றிபெற்ற பிறகு, ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டம் தொடங்கப்படும்" என அ.தி.மு.க வேட்பாளர் சந்திரசேகர் பேட்டியளித்துள்ள நிலையில், "இந்த வெற்று வார்த்தையைக் கேட்டுக் கேட்டு சலிச்சுப்போக்சு. வாக்கு கேட்டு வந்தால் உங்களைச் சிறைபிடிப்போம்" என்று ஆக்ரோஷத்தோடு களத்தில் நிற்கிறார்கள் பொதுமக்கள்.

                                       

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில், அ.தி.மு.க சார்பில் சிதம்பரம் தொகுதி வேட்பாளராகக் கொறடாவின் ஆதரவாளர் சந்திரசேகர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கூட்டணிக் கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியாளருமான  விஜயலட்சுமியிடம் வேட்பு மனுவை தாக்கல்செய்தார்.

                                            

மேலும், வேட்புமனுக்கான தொகையையும் செலுத்தினார். அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதேபோல, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிவஜோதி மற்றும் சுயேச்சை வேட்பாளர் ஜெகதீசன் என்பவரும் தங்களுடைய வேட்பு மனுவைத் தாக்கல்செய்தனர் 

                               

வேட்புமனு தாக்கல் செய்த பின் செய்தியாளரிடம் பேசிய அ.தி.மு.க வேட்பாளர் சந்திரசேகர். ”ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டம் நீண்ட வருடங்களாகத் தொடங்கப்படாமல் உள்ளது. நான் வெற்றிபெற்ற பிறகு, இத்திட்டத்தினை உடனே தொடங்கவும் அதற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

                                              

அதேபோல, "கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

இத்திட்டத்திற்காக நிலம் கொடுத்தவர்களிடம் பேசினோம். "இந்தத் திட்டம் வந்தால், இப்பகுதி மக்களுக்கு வேலை கிடைக்கும் என்று அரசின் வார்த்தைகளை நம்பி எங்களுடைய விளை நிலங்களைக் குறைந்த விலையில் கொடுத்தோம். 20 வருடங்களைக் கடந்த பின்பும் இந்தத் திட்டமும் வரவில்லை. எங்களுடைய நிலங்களும் எங்களுக்குக் கிடைத்தபாடில்லை" என்றார் பரிதாபமாக.

                                            

"ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர் சொல்லும் வார்த்தைதான். இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு எங்களது காதுகள் சலிச்சிப்போச்சு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கடந்த ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றித் தருவதாக சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சொன்னார். அதன்பிறகு ஒரு முயற்சிகூட எடுக்கப்படவில்லை. தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எனப் பலரும் வெற்று வார்த்தைகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். நாங்களும் கேட்டுக்கொண்டு வாக்கு அளித்துக்கொண்டிருக்கிறோம். இனியும் பொறுக்க மாட்டோம். எந்த வேட்பாளர்கள் எங்களிடம் வாக்கு கேட்டு வந்தாலும், அவர்களை நாங்கள் சிறைபிடிப்போம்" என்றனர், ஆதங்கத்தோடு நிலம் கொடுத்தவர்கள்.