`கைரேகை வைத்த வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றது தவறு!' - உயர் நீதிமன்றம் | Madras HC order over thiruparankundram by election

வெளியிடப்பட்ட நேரம்: 18:26 (22/03/2019)

கடைசி தொடர்பு:18:26 (22/03/2019)

`கைரேகை வைத்த வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றது தவறு!' - உயர் நீதிமன்றம்

'திருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போஸ் வெற்றிபெற்றது  செல்லாது' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றம்


கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க வேட்பாளர் சரவணன்  தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில், ஏ.கே.போஸின் வெற்றியை செல்லாது என அறிவித்து, தன்னை சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி வேல்முருன் விசாரித்து வந்த நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாகவும் சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கைரேகை தொடர்பாக விசாரிக்கக் கூடாது என்றும், தேர்தல் வழக்கை மட்டும் நடத்த சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

கைரேகை

இதற்கிடையில்,  திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ், ஆகஸ்ட் 2-ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதுகுறித்து நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டு, இறப்புச் சான்றிதழ் தாக்கல்செய்யப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, விசாரணையை முடித்து நவம்பர் இறுதி வாரத்துக்கு தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்நிலையில், வழக்கு நிலுவையில் இருப்பதால் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கவில்லை. இதில், திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க உத்தரவிடக் கோரியும், தி.மு.க சார்பில் டாக்டர் சரவணன் தரப்பில்  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன் முறையீடு செய்யப்பட்டது.  

அதில், தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், அதைக் காரணம்காட்டி தேர்தலை நடத்தாமல் இருப்பது தவறு, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதி வேல்முருகன், 'வழக்கு நிலுவையில் இருப்பதால், தேர்தல் நடத்தக் கூடாது என இந்த வழக்கில் இதுவரை உத்தரவிடவில்லையே' எனத் தெரிவித்தார். இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தேர்தல் செல்லாது என அறிவித்த நீதிபதி, ``ஜெயலலிதா கைரேகை மட்டும் வைக்கப்பட்ட ஏ.கே. போஸ் வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது தவறு. வேட்புமனு படிவத்தில் கையெழுத்திடுவதுதான் முறை. ஜெ வேட்பு மனு படிவத்தில் கைரேகை வைத்ததற்கு பாலாஜி மட்டும் தான் சாட்சி எனக் கூறுவது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. ஏ. கே. போஸ் வெற்றியை ரத்துசெய்யக் கோரி, சரவணன் தொடுத்த வழக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதே நேரம், தன்னை அந்த சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்கக் கோரிய சரவணனின் கூடுதல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன'' என்று உத்தரவிட்டார்.