`31 வருடங்களாக சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்ல போட்டியிடுறேன்' - சுயேச்சை வேட்பாளர் தியாகராஜன் | independent candidate thiyagarajan filed nomination

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (22/03/2019)

கடைசி தொடர்பு:20:30 (22/03/2019)

`31 வருடங்களாக சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்ல போட்டியிடுறேன்' - சுயேச்சை வேட்பாளர் தியாகராஜன்

நான் யார்கிட்டயும் ஓட்டு கேட்டு போகமாட்டேன். என் ஓட்டு எனக்கு போதும் என விருதுநகர் மக்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த முதல் சுயேட்சை வேட்பாளர் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தற்போது நடைபெற்றுவருகிறது. விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட, கடந்த 3 நாள்களாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், சிவகாசியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர், விருதுநகர் மக்களவைத் தொகுதியின் முதல் வேட்பாளராக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல்செய்தார்.

சுயேட்சை

இதுதொடர்பாக தியாகராஜனிடம் கேட்டபோது, ``1988-ம் ஆண்டில் இருந்து சட்டமன்றம், மக்களவை, நகராட்சி அப்படினு பல தேர்தல்கள்ல போட்டியிட்டுள்ளேன். 30 வருஷமா போட்டியிட்டும்கூட யார்கிட்டயும் வாக்கு கேட்க மாட்டேன். என் வீட்டில்கூட சொல்ல மாட்டேன். பிரசாரத்துக்கும் போக மாட்டேன். என் குடும்பத்தில இருக்குறவங்ககூட எனக்கு ஓட்டு போடுவாங்களானு தெரியாது. என்னோட வாக்கு கண்டிப்பா எனக்கு விழும். அது போதும். வேட்பாளர் பெயர் வரிசையில இருக்க என்னோட பேர பாத்து, வேற யாராச்சும் ஓட்டு போடுவாங்க. அப்படி இருந்தும் 300 ஓட்டு வரைக்கும் விழுந்திருக்கு.

சுயேட்சை

ஒவ்வொரு முறையும் முதல் ஆளா நான்தான் வேட்புமனு தாக்கல் செய்வேன். இப்போ, 73 வயசாயிருச்சு. அதனால், இந்த ஆண்டு மனுத் தாக்கல் செய்ய வேண்டாம்னு இருந்தேன். ஆனா, பக்கத்து வீட்டுக்காரங்கதான், உங்களுக்கு தேர்தல் மன்னன்னு பேரு இருக்கு. அத காப்பாத்தணும். கண்டிப்பா நில்லுங்கன்னு சொன்னாங்க. அதனாலதான் 3 நாளைக்குப் பின் இங்கே வந்தேன். ஆனாலும் இந்த ஆண்டும் நான்தான் முதல் ஆள். எங்கேயோ எனக்கு யோகம் இருக்கு தம்பி. இந்தத் தேர்தலுக்கு சிலிண்டர் சின்னம் கேட்டுள்ளேன். நிச்சயம் கிடைக்கும். பெண்களிடம் எளிமையாகப் போய்ச்சேரும். குக்கர் சின்னமெல்லாம் கொடுத்திருக்காங்க. எனக்கும் சிலிண்டர் கிடைக்கும். என் ஓட்டு கண்டிப்பா எனக்கு விழும்" என்று தெரிவித்தார்.