மீனாட்சியம்மன் வேடத்தில் வேட்புமனு தாக்கல் செய்த திருநங்கை! | Transgender files nomination in Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (22/03/2019)

கடைசி தொடர்பு:20:40 (22/03/2019)

மீனாட்சியம்மன் வேடத்தில் வேட்புமனு தாக்கல் செய்த திருநங்கை!

எங்களுக்கு சாதி, மதம் இல்லை என்று கூறி, வித்தியாசமான முறையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல்செய்த திருநங்கை, கவனம் ஈர்த்தார்.

பாரதி கண்ணம்மா

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி தமிழக அரசியல் களம் கடும் வெயிலிலும் பரபரப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது. பல்வேறு இடங்களிலும் வேட்புமனு தாக்கல்  செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில், மதுரையில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரும், தி.மு.க ஆதரவு வேட்பாளருமான எழுத்தாளர் சு.வெங்கடேசன் வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும். பல்வேறு சுயேச்சை வேட்பாளர்களும் தாக்கல் செய்தனர். இந்நிலையில், திருநங்கை பாரதி கண்ணம்மா என்பவர், மதுரை மீனாட்சியம்மன் வேடமணிந்து வேட்புமனு தாக்கல்செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் கடந்த 2014 -ம் ஆண்டே தேர்தலில் போட்டியிட்டேன்.

தேர்தல்

அதேபோல, தற்போதும் சுயேச்சையாகத் தேர்தலில் போட்டியிட உள்ளேன். திருநங்கைகளுக்கு சாதி, மத வேறுபாடுகள் இல்லை என்பதை உணர்த்த, நான் மீனாட்சியம்மன் வேடமணிந்தும் என்னுடன்  வந்த திருநங்கைகள் இஸ்லாமிய, கிறிஸ்துவர் வேடமணிந்து இணைந்து வேட்புமனு தாக்கல் செய்யவந்துள்ளோம்’’ என்றார்.