டெபாசிட் பணம் கொண்டுவராத அ.தி.மு.க வேட்பாளர்! - பணத்தைக் கொடுத்து நிலைமையைச் சமாளித்த எம்.பி | AIADMK Candidate nomination amount

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (22/03/2019)

கடைசி தொடர்பு:21:21 (22/03/2019)

டெபாசிட் பணம் கொண்டுவராத அ.தி.மு.க வேட்பாளர்! - பணத்தைக் கொடுத்து நிலைமையைச் சமாளித்த எம்.பி

தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  தொடங்க உள்ள நிலையில், நீலகிரி (தனி) தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

கலெக்டர் அலுவலகம் வந்த அ.தி.மு.க வேட்பாளர்

கடந்த 19-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஆனால், நேற்று வரை 3 நாள்களாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், 6 பேர் வேட்பு மனுவிற்கான விண்ணப்பங்களை மட்டும் பெற்றுச் சென்றிருந்தனர். இந்தச் சூழலில், இன்று மதியம் 1.30 மணியளவில் முதல் ஆளாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் சே.மணிமேகலை வேட்புமனு தாக்கல்செய்தார். இரண்டாவதாக, மதியம் 2.45 மணியளவில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் எம்.தியாகராஜன் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். 

கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே வந்தபோது, வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளருடன் செல்வதற்காக ராஜ்யசபா எம்.பி-க்கள் கே.ஆர்., அர்ஜுணன், ஏ.கே.,செல்வராஜ், நீலகிரி தொகுதி எம்.பி கோபாலகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் உள்ளே நுழைந்தனர். அப்போது, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பி சிவக்குமார், அவர்களைத் தடுத்து, 'வேட்பாளர் உட்பட 5 பேர்தான் உள்ளே செல்ல வேண்டும்' என்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 5 பேர் மட்டும் உள்ளே சென்றனர்.

வேட்புமனுத் தாக்கல்

தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம், அ.தி.மு.க., வேட்பாளர் தியாகராஜன் வேட்புமனுவை வழங்கினார். தொடர்ந்து உறுதிமொழியை வாசித்தார். தொடர்ந்து ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட நிலையில், டெபாசிட் தொகையை வழங்குமாறு கலெக்டர் கேட்டார். அப்போது வேட்பாளர் உட்பட அவருடன் வந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டனர். உடனடியாக ராஜ்யசபா எம்.பி அர்ஜுணன், தனது பாக்கெட்டில் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுக் கட்டை எடுத்து எம்.பி செல்வராஜிடம் கொடுத்தார். எவ்வளவு தொகை கட்ட வேண்டும் என கலெக்டரிடம் கேட்டனர். அவர், ரூ.12,500 எனத் தெரிவித்ததும்,வேட்பு மனுவிற்கு பணம் கட்டினார்கள். வேட்புமனு தாக்கலுக்கு டெபாசிட் பணம் கட்ட வேண்டும் என்பதை மறந்து பணம் கொண்டுவராத நிலையில், எம்.பி அர்ஜுணன் சுதாரித்துக்கொண்டு பணம் வழங்கியதால், நிலைமையை சமாளிக்க முடிந்தது என்று அ.தி.மு.க தொண்டர்கள் பேசிக்கொண்டனர்.
....