விருதுநகரில் வேட்புமனுத் தாக்கல் செய்த சீமான் மைத்துனர் - நாம் தமிழர் சார்பில் போட்டியிடுவதாக அறிவிப்பு | seeman brother in law file a petition in virudhunagar

வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (22/03/2019)

கடைசி தொடர்பு:21:15 (22/03/2019)

விருதுநகரில் வேட்புமனுத் தாக்கல் செய்த சீமான் மைத்துனர் - நாம் தமிழர் சார்பில் போட்டியிடுவதாக அறிவிப்பு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மைத்துனர் விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அக்கட்சி சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்தார்.

நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அந்தக் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த அருள்மொழித்தேவன் விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞரான இவர் முன்னாள் சபாநாயகர் கா.காளிமுத்துவின் மகன். இந்நிலையில் இன்று தன் கட்சியினருடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார்.

நாம் தமிழர்

இதுகுறித்து அவர் கூறியது, ``நாம் தமிழர் கட்சியில் 10 ஆண்டுகளாக அடிப்படை உறுப்பினராக உள்ளேன். தமிழ் மீதான பற்றின் அடிப்படையிலேயே எனக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. தேர்தல் செயல்பாட்டு வரைவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மக்கள் நலன்சார்ந்த அம்சங்களே உள்ளன. தேர்தலின் போது அவற்றை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்வோம். விருதுநகர் மாவட்டத்தின் முதன்மைத் தொழிலான பட்டாசைப் பாதுகாப்போம். நூற்பாலை, நெசவை மீட்டெடுப்போம். விவசாயம் செழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். மக்களை முன்னிலைப்படுத்தியே எங்கள் தேர்தல் பிரசாரமும் பணியும் இருக்கும். தந்தை அ.தி.மு.கவில் இருந்தார். அண்ணன் அ.ம.மு.கவில் உள்ளார். நான் நாம் தமிழர் கட்சியில் உள்ளேன். நாங்கள் விரும்பிய கொள்கையை ஏற்றுக் கொண்டு பிடித்த கட்சியில் இருக்கிறோம். இது எங்களுக்குக் கிடைத்த சுதந்திரம் எனத் தெரிவித்தார்.

நாம் தமிழர்

இவரது அண்ணன் டேவிட் அண்ணாதுரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.